கூடலூர் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்


கூடலூர் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 3 March 2018 3:15 AM IST (Updated: 3 March 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

கூடலூர்,

கூடலூர் மற்றும் அதையொட்டி உள்ள வனப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்து கின்றன.

இந்த நிலையில், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரியசூண்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் நடராஜ் (வயது 50). இவர் லாரஸ்டன் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் தற்காலிக தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பகல் 1 மணி அளவில் எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது புதர்களுக்குள் மறைந்து இருந்த காட்டெருமை ஒன்று திடீரென்று வெளியே வந்தது.

அதைப் பார்த்ததும் நடராஜ் தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த காட்டெருமை கொம்புகளால் அவரை குத்தி தூக்கி வீசியது. இதில் அவரது வலது கால் தொடை மற்றும் உடலில் பல இடங்களில் பலத்தகாயம் ஏற்பட்டது.

வலியால் துடித்த நட ராஜின் அலறல் சத்தம் கேட்ட சக தொழிலாளர்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். அவர்கள் காட்டெருமையை விரட்டியடித்தனர். பின்னர் அவர்கள், பலத்த காயம் அடைந்த நடராஜை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் மேப்பாடி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், வன காப்பாளர் மோகன்ராஜ் உள்பட வனத்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

Next Story