முதுமலை வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் குடித்து தாகம் தணிக்கும் காட்டு யானைகள்


முதுமலை வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் குடித்து தாகம் தணிக்கும் காட்டு யானைகள்
x
தினத்தந்தி 3 March 2018 3:00 AM IST (Updated: 3 March 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் குடித்து காட்டு யானைகள் தாகம் தணிக்கின்றன. இதற்காக வாகனத்தில் கொண்டு சென்று தண்ணீர் ஊற்றப்படுகிறது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. இதனால் வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. வனவிலங்குகளுக்கும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு போலவே வனப் பகுதிகளில் இந்த ஆண்டும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக முது மலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகின்றன. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இதனால் தண்ணீர் இல்லாத பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி தெப்பக்காடு பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள மணல் சாலை, வட்டசாலைகளில் உள்ள தொட்டிகளில் தினந்தோறும் தண்ணீர் இருப்பு குறித்து கண்காணிக்கப்படுகிறது.

இதில் தண்ணீர் இல்லாத தொட்டிகளுக்கு, வாகனத்தில் கொண்டு சென்று உடனுக்குடன் தண்ணீர் ஊற்றப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை மணல் சாலையில் உள்ள தொட்டியில் தண்ணீர் ஊற்ற வனத்துறை ஊழியர்கள் வாகனத்தில் சென்றனர்.

அப்போது அந்த தொட்டியின் அருகே காட்டு யானைகள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தன. இதனால் வனத்துறை ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையாக வாகனத்தை ஓட்டிச் சென்று தொட்டிக்கு மிக அருகில் நிறுத்தினர். பின்னர் வாகனத்தில் இருந்த தண்ணீரை திறந்து தொட்டிக்குள் விட்டனர். உடனே காட்டு யானைகள் மிகவும் உற்சாகமாக தொட்டியில் விழும் தண்ணீரை குடித்து தாகம் தணித்தன.

மேலும் காட்டு யானைகள், தொட்டியில் இருந்து தண்ணீரை துதிக்கையால் எடுத்து உடலில் ஊற்றி வெப்பத்தை தணித்தன. இதை பார்த்து வனத்துறை ஊழியர்களை மகிழ்ச்சி அடைந்தனர்.

தொட்டியில் தண்ணீர் நிரப்ப சென்ற வாகனத்தை காட்டு யானைகள் மறிக்கவோ, தொந்தரவோ செய்ய வில்லை. தொட்டியில் ஊற்றிய தண்ணீரை குடித்து விட்டு அமைதியாக சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story