திருப்பரங்குன்றம் கோவில் நிலம் குறித்த தகவல் பலகை வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்


திருப்பரங்குன்றம் கோவில் நிலம் குறித்த தகவல் பலகை வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 3 March 2018 3:45 AM IST (Updated: 3 March 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் கோவில் நிலம் என்று கூறி தகவல் பலகை வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் 3, 4-வது தெருக்களில் கடந்த 27-ந்தேதி தமிழ்நாடு திருத்தொண்டர்சபை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கோவில் நிலம் மீட்பு குறித்து ஆய்வு செய்தனர். அதில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 55 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்ற ஆய்வு குழுவினர் கூறினர்.

மேலும் அவர்கள் சட்டப்பூர்வமாக கோவில் நிலங்கள் மீட்கப்படும் என்றனர். இதையடுத்து நேற்று காலை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உரிய இடத்தில் நிலம் குறித்த தகவல் பலகை வைப்பதற்காக அங்கு கோவில் ஊழியர்கள் வந்தாக தெரிகிறது. இந்தநிலையில் பூரண சந்திரன், பாண்டியன் ஆகியோர் தலைமையில் நெல்லையப்பபுரம் பொதுமக்கள் திருநகர் 2-வது பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மதுரை-திருமங்கலம் மெயின் சாலையின் இருபுறமும் வழிநெடுகிலுமாக வாகனங்கள் நீண்ட தூரம் நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த திருநகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 51 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியல் தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:- சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். வங்கிகளில் கடனுதவி பெற்று பிளானிங் அப்ரூவல் பெற்று வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மின் இணைப்பு, வீட்டு வரி, குடிநீர் குழாய் வரி ஆகியவற்றிற்கு முறையாக மனு செய்து, தகுந்த அனுமதி பெற்று வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நத்தம் புறபோக்கு இடமாக இருப்பினும், பட்டா வாங்குவதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் நத்தம் சர்வே எண்ணை குறிப்பிட்டு கோ வில் நிலம் என்று கூறி எங்களை காலி செய்யும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது மன வேதனையை உருவாக்கி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story