கண்ணாடி பந்துகள்-பாராசூட்டில் பறந்து வீரர்கள் சாகசம்


கண்ணாடி பந்துகள்-பாராசூட்டில் பறந்து வீரர்கள் சாகசம்
x
தினத்தந்தி 3 March 2018 4:30 AM IST (Updated: 3 March 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, மணப்பாடு கடற்கரையில் நேற்று தொடங்கிய வான், கடல், நிலம் விளையாட்டு நிகழ்ச்சியில், கண்ணாடி பந்துகள்-பாராசூட்டில் பறத்தல் போன்ற பல்வேறு சாகசங்களை வீரர்கள் நிகழ்த்தினர். இதனை பொதுமக்கள் திரளாக பங்கேற்று கண்டுகளித்தனர். இந்த நிகழ்ச்சி நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட நலக்குழு, இந்திய ஏரோ விளையாட்டு மற்றும் அறிவியல் நிறுவனம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் இணைந்து மக்களின் பொழுதுபோக்குக்காக வான், கடல், நிலம் சாகச விளையாட்டு நிகழ்ச்சி தூத்துக்குடி துறைமுக கடற்கரை மற்றும் மணப்பாடு கடற்கரையில் நடந்தது.

இந்த சாகச விளையாட்டுகளின் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலையில் தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அவர் சாகச விளையாட்டுகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் பாராசூட்டில் பறத்தல்(பாரா செய்லிங்), பெரிய கண்ணாடி பந்துக்குள் ஆட்களை நிறுத்தி உருட்டி விளையாடுதல்(சோர்பிங்), கமாண்டோ வீரர்களின் வலை பயிற்சி ஆகிய சாகச விளையாட்டுகளும், மணப்பாடு கடற்கரையில் படகு மூலம் கடலுக்குள் பாராசூட்டில் பறத்தல்(அக்வா செய்லிங்), ஆற்றை கயிறு கட்டி கடத்தல், கமாண்டோ வீரர்களின் வலை பயிற்சி, பெரிய கண்ணாடி பந்துக்குள் ஆட்களை நிறுத்தி உருட்டி விளையாடுதல்(சோர்பிங்) ஆகிய விளையாட்டுகளும் நடந்தன. பொதுமக்கள் திரளாக பங்கேற்று கண்டுகளித்தனர்.

தமிழக அரசு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் பொழுதுபோக்குக்கான வான், கடல், நில சாகச விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

மணப்பாடு பகுதியின் கடல் அமைப்பு, சாகச விளையாட்டுக்கு உகந்ததாக உள்ளது. வரும் காலங்களில் வெளிநாடுகளில் உள்ள சாகச விளையாட்டுக்கு உகந்த கடல்பகுதி போல், மணப்பாடு உருவாகும். அதற்கான முன்னோட்டமாக இந்த சாகச விளையாட்டு நிகழ்ச்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விளையாட்டு போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. விளையாட்டுக்கள் நடப்பதையொட்டி இரண்டு கடற்கரை பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, மீன்வளத்துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். இந்த போட்டிகளில் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் தங்கள் பெயர்களை பதிவு செய்து பங்கேற்று உள்ளனர்.

Next Story