அருப்புக்கோட்டையில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை


அருப்புக்கோட்டையில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 3 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் மீண்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக 23 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் பொது மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி வந்தனர். நகராட்சி நிர்வாகமும் குடிநீர் வினியோகம் செய்வதில் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. குடிநீர் வினியோகத்தை மேம்படுத்துவது தொடர்பாக நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். நகராட்சி ஆணையாளர் முத்து, உதவி பொறியாளர் காளஸ்வரி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக உதவி பொறியாளர் மணிமாறன், உதவி பொறியாளர் செல்வகுமார் கலந்துகொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

அருப்புக்கோட்டை நகர் மக்களுக்கு கடந்த காலங்களில் வைகை அணையிலிருந்து கிடைக்க பெற்ற தண்ணீரையும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வல்லநாடு பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற 60 லட்சம் லிட்டர் தண்ணீரையும் சுழற்சி முறையில் நகராட்சி நிர்வாகம் வழங்கி வந்தது. நாளடைவில் போதிய மழை இல்லாததால் வைகை அணை நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தாமிரபரணியிலிருந்து கிடைக்கப் பெற்ற 40 லட்சம் லிட்டர் தண்ணீரையே 15 நாட்களுக்கு ஒரு முறை பொது மக்களுக்கு வினியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அருப்புக்கோட்டைக்கு வரும் தாமிரபரணி கூட்டு குடிநீரின் அளவு 30 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு 23 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 40 லட்சம் லிட்டருக்கு குறையாமல் குடிநீர் வழங்கப்படுவதாக உறுதி அளித்துள்ளனர். வழங்கப்படும் குடிநீரையும் அனைத்து பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் நகராட்சி அதிகாரிகள் கூறும் நேரத்தில் திறந்து விடுவதற்கும் உறுதி கூறினர். இதனால் நகராட்சி நிர்வாகம் வரும் காலங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யலாம்.

குடிநீர் நிலைமையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நகர்ப்புறங்களில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அப்பணிகளும் நடைபெற உள்ளது.

இவ்வாறு கூறினார்.

Next Story