உபகரணங்கள் இன்றி கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்கள், மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?


உபகரணங்கள் இன்றி கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்கள், மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
x
தினத்தந்தி 3 March 2018 2:45 AM IST (Updated: 3 March 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் போதிய உபகரணங்கள் இன்றி துப்புரவு பணியாளர்கள் கழிவுகளை அகற்றும் நிலை உள்ளதால் அவர்களுக்கு நோய் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 3 நகராட்சிகளும், திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்பட 12 பேரூராட்சிகளும் உள்ளன.

இதுதவிர 445 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தினசரி அந்தந்த உள்ளாட்சி நிர்வாக பகுதிகளில் டன் கணக்கில் குப்பைகள் சேருகின் றன. மேலும் சாக்கடை கழிவுகள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. இவற்றை அகற்றும் பணிகளை செய்ய துப்புரவு பணியாளர்களுக்கு போதிய உபகரணங்கள் இல்லை. இதனால் அவர்கள் கைகளால் அவற்றை அப்புறப்படுத்துகின்றனர். இவ்வாறு உபகரணம் இன்றி கழிவுகளை அகற்றுவதால் பணியாளர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் போதிய பாதுகாப்பு வசதிகளும் கிடையாது என்று புலம்புகின்றனர் துப்புரவு பணியாளர்கள்.

இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் சிலர் கூறும்போது, சாக்கடை கழிவுகளை அகற்ற உள்ளாட்சி நிர்வாகத்தில் எந்த உபகரணங்களும் இல்லை. இதனால் வேறு வழியின்றி அதிகாரிகள் உத்தரவுக்காக பாதுகாப்பு இன்றி சாக்கடை கால்வாய்களில் இறங்கி கழிவுகளை அகற்றுகிறோம். மனிதர்களே மனித கழிவுகளை அள்ளக்கூடாது, சாக்கடை கழிவுகளை அகற்றும்போது போதிய உபகரணங்கள் இருக்க வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் மாவட்டத்தில் சில பேரூராட்சி, ஊராட்சிகளில் துப்புரவு உபகரணங்கள் இல்லை. பல இடங்களில் ஓட்டை உடைசலாகவே உபகரணங்கள் உள்ளன என்றனர்.

எனவே கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் துப்புரவு தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வசதி செய்துதருவதுடன், போதிய உபகரணங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story