ஹோலி பண்டிகை கொண்டாட்டம்: கவர்னர், முதல்-அமைச்சர் பங்கேற்பு


ஹோலி பண்டிகை கொண்டாட்டம்: கவர்னர், முதல்-அமைச்சர் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 March 2018 5:15 AM IST (Updated: 3 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி,

நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுவை மாநிலத்திலும் ஹோலி பண்டிகை கொண்டாடினர். புதுவை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். முன்னதாக அவர்களை போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் வரவேற்றார்.

விழாவில் பிரெஞ்சு துணை தூதரக அதிகாரி கேத்ரின் ஸ்வார்ட்டு, போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் ராஜீவ் ரஞ்சன், சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, போலீஸ் சூப்பிரண்டுகள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையில் பணியாற்றி வரும் வடமாநில அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். விழாவில் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசியும், பூக்களை தூவியும் ஹோலி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

இதுகுறித்து கவர்னர் கிரண்பெடி கூறியதாவது:-

ஹோலி பண்டிகை அனைவரும் கொண்டாட வேண்டிய பண்டிகை. ஆனால் தண்ணீரில் வண்ணப்பொடிகளை கலந்து கொண்டாடுவது தண்ணீரை வீணடிக்கும் செயல் ஆகும். நீரை பாதுகாப்பது நம் கடமை. பணம் எப்போது வேண்டுமானாலும் வரும். ஆனால் தண்ணீர் அப்படியல்ல. எனவே ஹோலி பண்டிகையை வண்ண மலர்களுடன் கொண்டாடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

வடமாநிலங்களில் குளிர்காலம் முடிவடைந்து வசந்தகாலம் தொடங்குவதை ஹோலி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். புதுவையில் ராஜஸ்தான், குஜராத், மேற்குவங்காளம் போன்ற வடமாநிலங்களை சேர்ந்த மக்கள்குறிப்பிட்ட அளவு வசித்து வருகின்றனர். புதுவையில் தற்போது ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மத ஒற்றுமையை பறை சாற்றும் நிகழ்ச்சியாக இது உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜிம்பர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இங்குள்ள வடமாநில மாணவ-மாணவிகள் அதனை சிறப்பாக கொண்டாடினர். அப்போது அவர்கள் வண்ண பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த நீரை ஒருவர் மீது ஒருவர் பீச்சி அடித்தும், இசைக்கருவிகளை வாசித்தும் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர். மாணவர்களுக்கு இடையே உறியடி, கபடி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். 

Next Story