காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம்: பிரதமர் பதவிக்கு மோடி தகுதியற்றவர், வைகோ பேட்டி


காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம்: பிரதமர் பதவிக்கு மோடி தகுதியற்றவர், வைகோ பேட்டி
x
தினத்தந்தி 3 March 2018 5:00 AM IST (Updated: 3 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது, பிரதமர் பதவிக்கு மோடி தகுதியற்றவர் என வைகோ கூறினார்.

புதுச்சேரி,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புதுச்சேரிக்கு நேற்று வந்தார். இங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டது. காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு ஒரு தலைபட்சமான தீர்ப்பை அளித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீரை அதிகமாக கேட்டிருந்தோம். ஆனால் ஏற்கனவே வழங்கி கொண்டு இருந்த தண்ணீரின் அளவில் 14.75 டி.எம்.சி.யை குறைத்துவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இதில் அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திப்பது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை. பிரதமர் பதவிக்கே மோடி தகுதியற்றவர். தமிழக அரசை வேண்டுமானால் பிரதமர் கிள்ளுக்கீரையாக நினைக்கலாம். தமிழர்களை அப்படி நினைத்துவிடாதீர்கள். அப்படி எண்ணினால் அது உங்களின் அறியாமையின் வெளிப்பாடு ஆகும்.

தற்போது கர்நாடக மாநிலத்திலும் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்த ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரி சாத்தியமற்றது என கூறி உள்ளார். பொறுப்பற்ற இந்த பதிலுக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யவேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

Next Story