செதுவாலை கிராமத்தில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 11 பேர் காயம்


செதுவாலை கிராமத்தில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 11 பேர் காயம்
x
தினத்தந்தி 3 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

செதுவாலை கிராமத்தில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.

அணைக்கட்டு, 

அணைக்கட்டு ஒன்றியம், செதுவாலை கிராமத்தில் நேற்று காளை விடும் திருவிழா நடந்தது. இதில் கலந்துகொள்ள கொணவட்டம், வாணியம்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 152 காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. காளைகளை விரட்டுவதற்கும் காளை மீது கையை போடுவதற்கும் இளைஞர்கள் திரண்டிருந்தனர். அதே போல் காளைகள் சீறிப்பாய்வதை வேடிக்கை பார்ப்பதற்காக பொதுமக்களும் திரண்டிருந்தனர்.

காளை விடும் விழா தொடங்குவதற்கு முன்பு செதுவாலை கால்நடை மருத்துவர் அந்துமன் மற்றும் உதவி மருத்துவர்கள் காளைகளை பரிசோதித்த பிறகே போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்தனர்.

காளைவிடும் விழாவை அணைக்கட்டு தாசில்தார் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவை போட்டி போட்டு கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து ஓடின.

இளைஞர்களின் ஆரவாரத்தில் காளைகள் மிரண்டு தெருவில் அங்கும் இங்குமாக ஓடின. சில காளைகள் பாதுகாப்பு தடுப்பு கம்புகளை தாண்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வாலிபர்களை முட்டி தள்ளியது. இதில் 11 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து காயம் அடைந்தவர்களுக்கு பொய்கை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பார்த்தீபன், வினோத், சாந்தினி தலைமையிலான மருத்துவ குழுவினர் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளிகொண்டா வருவாய் ஆய்வாளர் தேவிகலா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஏற்பாடுகளை செதுவாலை ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Next Story