பச்சிளம் ஆண் குழந்தை ரோட்டில் வீச்சு குடியாத்தம் அருகே சம்பவம்
குடியாத்தம் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ரோட்டில் கிடந்தது.
குடியாத்தம்,
குடியாத்தத்தை அடுத்த சேத்துவண்டை பஸ் நிறுத்தம் அருகே குடியாத்தம் - காட்பாடி ரோட்டில் வசிப்பவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சரோஜா. நேற்று அதிகாலை 4 மணி அளவில் கோவிந்தராஜ் வீட்டின் அருகே வெகு நேரமாக குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து கணவன் - மனைவி இருவரும் குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை தேக்கு மர இலையில் வைத்தபடி துணியில்லாமல் தரையில் இருந்தது. கடும் குளிரால் பச்சிளங் குழந்தை நடுங்கியபடி இருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தையை மீட்டு தங்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், தனிப்பிரிவு ஏட்டு செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார், குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ அலுவலர் அமுதாமணி, குழந்தைகள் நல மருத்துவர் மாறன்பாபு ஆகியோர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை நள்ளிரவில் பிறந்துள்ளதாகவும், 2 கிலோ 350 கிராம் எடை இருப்பதாகவும், குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்தால் தொப்புள்கொடிக்கு கிளிப் போடப்படும். ஆனால் கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தைக்கு தொப்புள்கொடியில் துணிகள் காயப்போடும் கிளிப் போடப்பட்டிருந்தது.
யாரோ பெற்ற குழந்தையை அனாதையாக போட்டுச்சென்று உள்ளனர். அந்த கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்தும், கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா? என்பது குறித்தும் குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story