ரூ.40 ஆயிரம் அபராதம் விதிப்பதாக அதிகாரி கூறியதால் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்வதாக கூறி விவசாயி போராட்டம்
கலசபாக்கம் அருகே மின்வாரிய அதிகாரியை கண்டித்து விவசாயி ஒருவர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலசபாக்கம்,
கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் அருகே உள்ள காரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45), விவசாயி. இவர் அரசு நிதியுதவியுடன் பசுமை திட்டத்தில் வீடு கட்டி வருகிறார். இதற்கு தற்காலிக மின்இணைப்பு பெறுவதற்காக நாயுடுமங்கலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் செலுத்தி மின் இணைப்பு பெற்றார்.
அதனை தொடர்ந்து நாயுடுமங்கலம் மின்வாரிய உதவி மின்பொறியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் காரப்பள்ளம் கிராமத்திற்கு சென்று உள்ளனர்.
அப்போது புதிதாக வீடு கட்டும் முருகன் வீட்டுக்கு சென்றனர். அங்கு முருகன் இல்லை. அவரது மனைவி தமிழரசி மட்டும் இருந்தார். அவரிடம் “நீங்கள் விவசாய நிலத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து வீடு கட்டுகிறீர்கள். இது முறைகேடானது. எனவே விவசாய இணைப்பை துண்டித்து விடுவோம்” என மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு அபராதமாக ரூ.40 ஆயிரம் விதிக்கப்படும் என்றும், கணவர் முருகன் வந்தவுடன் அவரை அலுவலகத்தில் வந்து பார்க்க சொல் என்று கூறி ஆயிரம் ரூபாய் மட்டும் வாங்கி கொண்டு சென்று உள்ளனர்.
இது பற்றி தனது கணவர் முருகனிடம் தமிழரசி கூறி உள்ளார். இதனால் முருகன் அதிர்ச்சி அடைந்தார்.
மறுநாள் பணியாளர் ஒருவருடன் உதவி மின் பொறியாளர் முருகன் வீட்டுக்கு வந்து “அலுவலகத்துக்கு வரச்சொன்னேன் ஏன் வரவில்லை” என கேட்டு உள்ளார். இதற்கு முருகன் “நான் எந்த தவறும் செய்யவில்லை. ஏன் ரூ. 40 ஆயிரம் அபராதம் தொகை கட்ட வேண்டும். என்னிடம் அவ்வளவு தொகை இல்லை” என்றார். அப்படியானால் ரூ.30 ஆயிரம் மட்டுமாவது செலுத்துங்கள் என உதவி மின்பொறியாளர் கூறியுள்ளார். பின்னர் பேசியதில் ரூ.10 ஆயிரமாவது கட்டுங்கள். பணம் கட்ட தவறினால் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த முருகன், வீட்டின் அருகில் இருந்த மின் கம்பத்தில் ஏறி அதிகாரியை கண்டித்து தற்கொலை செய்யப்போவதாக கூறி போராட்டம் நடத்தினார்.
அதிர்ச்சி அடைந்த சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளர் அங்கு வந்தார். அவர், “நீ எந்த தொகையையும் கட்ட வேண்டாம் தயவு செய்து கீழே இறங்கி வந்து விடு” என கேட்டு உள்ளார். ஆனால் அந்த விவசாயி சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் கம்பத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். பின்னர் சமாதானம் அடைந்த அவர் கீழே இறங்கி வந்தார்.
இதுபற்றி விவசாயி முருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் வீடு கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பை பெற்றுக்கொடுங்கள் என மின் வாரிய அலுவலரிடம் தெரிவித்தேன். இதற்கு தேவையான ஆவணங்களை முறையாக வழங்கியும் மின் இணைப்பை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். அதன்பிறகு ரூ.5 ஆயிரம் கொடுத்த உடன் மின் இணைப்பு வழங்கினர். பிறகு வீட்டின் அருகில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதனை பெரிய பாத்திரத்தில் நிரப்பி அதிலிருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வந்தேன். இதற்கு கவிதா என்ற அதிகாரி நீ ஆழ்துளை கிணறு அமைத்துதான் வீடு கட்ட வேண்டும். விவசாய நிலத்தில் இருந்து நீரை கொண்டு வரக்கூடாது என கூறினார்.
ஆழ்துளை கிணறு அமைக்க என்னிடம் போதுமான பணம் இல்லை. இதனால் தான் நான் அரசாங்கத்தின் சிறப்பு திட்டத்தில் வீடு வாங்கி கட்டி வருகிறேன் எனக்கு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ரூ.5 லட்சம் கடனில் உள்ளேன். இந்த நிலையில் என்னை ரூ.40 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என உதவி மின்பொறியாளர் கூறியதால் நான் மனம் உடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்னைப்போல் யாரும் இந்த கஷ்டம் அனுபவிக்கக்கூடாது. மின்வாரிய அதிகாரிகளுக்கு இது பாடமாக இருக்க வேண்டும்” என்றார். அவரிடம் மின்வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story