அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் சட்ட உதவிகளை பெறலாம்


அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் சட்ட உதவிகளை பெறலாம்
x
தினத்தந்தி 3 March 2018 4:00 AM IST (Updated: 3 March 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதில் தாமதம் ஏற்படும்போது சட்ட ரீதியான உதவிகளை பெறலாம் என மாவட்ட நீதிபதி கலைமதி கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட சட்ட சேவை முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட நீதிபதி கலைமதி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி பக்கிரிசாமி, சார்பு நீதிபதி கோவிந்தராஜன், வக்கீல்கள் சங்க தலைவர் மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, உதவி கலெக்டர் முத்துமீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் மாவட்ட நீதிபதி கலைமதி பேசியதாவது:-

சட்டம், அரசின் நல திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், சட்ட பிரச்சினைகளுக்கு தேவையான ஆலோசனை வழங்குவதற்காகவும் சட்ட சேவை முகாமானது நடத்தப்படுகிறது.

பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

அரசின் நலத்திட்டங்கள் பெறுவதில் தாமதம் ஏற்படும்போது பொதுமக்கள், சட்டரீதியான உதவிகளை பெறலாம். அதற்கு மாவட்ட கோர்ட்டில் இயங்கி வரும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய தீர்வு பெறலாம்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறுகையில், அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளவே முகாமானது நடத்தப்படுகிறது.

பொதுமக்கள் பட்டா மாறுதுல், மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்டவைகள் பெற இடைதரகர்கள் இல்லாத வகையில் மக்கள் பயன்பெறும் வகையில் இ-சேவை மையம் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் செயல்பட்டு வருகிறது. இதனால் காலவிரயம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

அரசின் திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கூறினார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் 10 பேருக்கு திருமண உதவித்தொகைக்கான ஆணையும், 4 பேருக்கு மாற்றுத்திறனாளி மற்றும் 6 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையும், 11 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 9 பேருக்கு ரூ.16 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கடனுதவிக்கான ஆணையும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 10 பேருக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பில் அசோலா தீவனப்பயிர் வளர்ப்பு ஈடுபொருளும் ஆக மொத்தம் 50 பேருக்கு ரூ.20 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Next Story