கருகும் பயிர்களை காப்பாற்ற புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்
கருகும் பயிர்களை காப்பாற்ற புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்லக்குடி,
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பகுதியில் கோவாண்டாகுறிச்சி, வெங்கடாசலபுரம், ஆலம்பாக்கம், திண்ணகுளம், விரகாலூர், நத்தம்மாங்குடி, புதூர்பாளையம், வாண்டிராம்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி விளைநிலங்களில் புள்ளம்பாடி வாய்க்காலில் வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சம்பா சாகுபடி நடவு செய்யப்பட்டு களை எடுக்கும் பணி முடிந்து, சில பகுதிகளில் நெற்பயிர்கள் பால்கதிர் வந்த நிலையில் உள்ளது.
இந்தநிலையில் புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் தமிழக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று தண்ணீர் திறக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற அதிகாரிகள் பார்வையிட்டு சென்றும், இதுவரை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறப்பதாக தெரியவில்லை. சம்பா சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்து விவசாயம் செய்தனர். நடவு நட்டு, களை எடுத்து, கதிர் வந்த நிலையில் தண்ணீர் இல்லாததால் கருகுவதோடு, தற்போது தண்ணீர் இல்லாமல் நிலங்கள் பாளங்களாக வெடிக்கத்தொடங்கி விட்டதால் விவசாயிகள் விரக்தியடைந்தனர்.
இதையடுத்து புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி 15 கிராமங்களை சேர்ந்த புள்ளம்பாடி வாய்க்கால் பாசன பகுதி விவசாயிகள் நேற்று காலை புள்ளம்பாடி காமராஜர் சிலை முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று திருச்சி-சிதம்பரம் சாலையில் கத்திரிபள்ளம் என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் மற்றும் புள்ளம்பாடி பாசன கமிட்டி நிர்வாகிகள் சகாதேவன், திருநாவுக்கரசு, நடராஜன், ஓவியன் வீரசேகரன், மீனாட்சிசுந்தரம், துரைசாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் லால்குடி கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாஸ்கர், சிவகுமார் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், உடனடியாக தண்ணீர் திறந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம். வாய்க்காலில் ஓரிரு நாட்களில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் முழுமையாக பயிர்கள் கருகி விடும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மனவேதனையுடன் கூறினார்கள்.
அப்போது கோட்டாட்சியர் கூறுகையில், மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின்படி வந்துள்ளோம். மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலையை ஆராய்ந்து மாவட்ட கலெக்டர், தமிழக அரசிடம் பேசி வருகிறார். ஓரிரு நாட்களில் தண்ணீர் திறக்க ஆவன செய்யப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story