அரசின் திட்டங்கள் சாமானிய மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுவேன் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் அன்பழகன் பேட்டி
அரசின் திட்டங்கள் சாமானிய மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுவேன் என புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய கோவிந்தராஜ் ஆதிதிராவிட நலத்துறை இணை செயலாளராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று துறை இயக்குனராக பணியாற்றிய அன்பழகன் கரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் கரூர் மாவட்டத்தின் 15-வது கலெக்டராக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அதிகாரியும், கலெக்டர் பொறுப்பு வகித்த சூர்யபிரகாஷ் கோப்புகளை ஒப்படைத்தார். மேலும் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்கள் கூறினார். கல்யாணபசுபதீஸ்வரர் கோவில், கல்யாண வெங்கடரமண சாமி கோவில் சார்பில் கலெக்டர் அன்பழகனுக்கு மாலை அணிவித்து சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டன. அரசு துறை அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலெக்டருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், “கரூர் மாவட்டத்தை ஒரு நல்ல சீர்மிகு முன்னேற்றமான மாவட்டமாக மாற்றுவதற்கான முயற்சிகளை அனைத்து அரசு அலுவலர்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செயல்படும். அரசின் அனைத்து நலத்திட்டங்கள் சாமானிய மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுவேன். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் கடந்த 1993-ம் ஆண்டில் நான் (அன்பழகன்) பொறியாளராக பணியாற்றினேன். அதன்பின் மத்திய பணியில் 6 ஆண்டுகாலம் பணியாற்றினேன். கடந்த 2000-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் முதன்மை மதிப்பெண் பெற்று பல்வேறு மாவட்டங்களில் அரசு துறையில் பணியாற்றி உள்ளேன். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தல் பார்வையாளராக நான் கரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளேன். நிர்வாக காரணங்களால் தேர்தல் ரத்தாகி விட்டது. தற்போது தேர்தலை நடத்தும் இடத்திற்கு இங்கு வந்துள்ளேன்” என்றார்.
கலெக்டர் அன்பழகனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆகும். இவர் கடந்த 2000-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற பின் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உதவி கலெக்டராக அரசு பணியை தொடங்கினார். தற்போது முதல் முறையாக கலெக்டராக கரூர் மாவட்டத்தில் பொறுப்பேற்றுள்ளார். கலெக்டர் அன்பழகன் பொறுப்பேற்பதை காண அவரது தாய் காவேரியம்மாள், கலெக்டரின் மனைவி பூமா, குழந்தைகள் கவின்(வயது 13), இனியா(7), கலெக்டரின் மாமனார், மாமியார், தங்கையின் குடும்பத்தினர் வந்திருந்தனர். கலெக்டர் அன்பழகன் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்ற போது அதனை கண்டு அவரது தாய் உள்பட உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story