ஆட்டம் காணும் அடிப்படை அமைப்பு


ஆட்டம் காணும் அடிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 3 March 2018 11:29 AM IST (Updated: 3 March 2018 11:29 AM IST)
t-max-icont-min-icon

நமது நாட்டில் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி முதல் நமக்கென்று ஒரு அரசியல் நிர்ணய சட்டத்தை உருவாக்கி செயல்படுகின்றோம்.

நமது நாட்டில் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி முதல் நமக்கென்று ஒரு அரசியல் நிர்ணய சட்டத்தை உருவாக்கி செயல்படுகின்றோம். அதில் தேவையான சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வந்திருக்கின்றோம். அதன்படி மேல்மட்டத்தில், மத்தியில் நாடாளுமன்றம் செயல்படுகின்றது. மாநில அளவில் சட்டப்பேரவைகள் இயங்குகின்றன. அடித்தளத்தில், கீழ்மட்டத்தில், உள்ளாட்சி மன்றங்கள் பணியாற்றுகின்றன.

இந்த மூன்று வகையான அமைப்பு முறைகளுக்கும் உரிய காலத்தில் சரியான நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்று மக்கள் சார்பாளர்கள் தேர்ந்தெடுக்க பெற்று, ஆட்சி நடைபெறும் பொழுதுதான் மக்களாட்சி செயல்படும். நமது நாட்டில் நாடாளுமன்ற, சட்ட பேரவை தேர்தல்கள் கூட ஓரளவு குறிப்பிட்ட காலங்களில் நடைபெறுகின்றன. ஆனால் உள்ளாட்சி தேர்தல் மட்டும் பல்வேறு காரணங்களால் உரிய காலத்தில் நடப்பதில்லை.

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் 2016 அக்டோபர் 24-ந் தேதியுடன் நிறைவுபெற்றது. அதற்கு முன்பே உள்ளாட்சி தேர்தல் முடிந்து அன்று புதிய சார்பாளர்கள் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை ஒத்தி போட்டது. உள்ளாட்சி மன்றங்களின் நிர்வாக அதிகாரிகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி நிர்வாகத்தை நடத்துகின்றது.

தேர்தல் நடத்தக்கோரி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பெற்றன. நீதியரசர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தல் நடத்தும்படி அறிவுறுத்தினர். அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்ற அவமதிப்பாக உருவெடுத்தது. தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது. இன்னமும் பழைய நிலை தொடர்கின்றது.

நமது தேர்தல் ஆணையம் உரிய காலத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களை நடத்தவில்லை என்றால், நிர்வாக எந்திரத்தின் செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க இயலாத நிலை உருவாகும். நிர்வாக பணிகள் தேங்கும்.

உள்ளாட்சி அமைப்பின் நிலை அப்படியல்ல. அவை மாநில அரசுகளின் கைப்பாவைகளாக இயங்குகின்றன. சட்டப்படி அவற்றிற்கு நிறைய அதிகாரங்கள் உள்ளன. எல்லாம் ஏட்டளவில் இருப்பவை. நடைமுறையில் மேல்மட்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் அவை இயங்குகின்றன. உண்மையான அதிகார பரவல் முறை இங்கு செயல்படவில்லை. அதன் விளைவுகளை தான் நாம் அறுவடை செய்கின்றோம்.

உள்ளாட்சி தேர்தல் ஒத்திபோடப்பட்டதற்கு பல காரணங்களை அரசு தரப்பில் கூறினர். வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதில் தொடங்கி, தொகுதிகள் சீரமைப்பு, ஒதுக்க பெற்ற மன்றங்கள், தொகுதிகள் தேர்வு என்று புதிது புதிதாக சிக்கல்களை தொகுத்து கூறினர். ஆங்காங்கு சில வழக்குகளும் தொடரப் பெற்றன. மொத்தத்தில் தேர்தல் களம் குழம்பியது.

இவற்றில் வெளியில் சொல்லப்படாத ஒரு காரணமும் இருந்தது. ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழல் இல்லாததால் தேர்தலை தள்ளி போடுவதாக கூறினர். இதுகுறித்து எல்லா பத்திரிகைகளும் எழுதின. மக்களும் குரல் கொடுத்தனர். வழக்கம் போல தேர்தல் மட்டும் நடைபெறவில்லை. அதற்குரிய அறிகுறியும் தென்படவில்லை.

உள்ளாட்சி என்பது நமது ஆட்சி முறையின் அடிப்படை அமைப்பு. நமது நாட்டிற்கு இது புதுமையானதல்ல. மன்னராட்சி காலத்திலேயே மக்கள் நலனை பேணி கட்டிக்காக்க விரும்பிய அரசர்கள் உள்ளாட்சி முறையினை உருவாக்கினர். தமிழகத்தில் சோழர் கால ஆட்சியில் நன்கு வடிவமைக்க பெற்று செயல்பட்ட பஞ்சாயத்து முறை இருந்ததை, முதலாம் பராந்தக சோழனால் கி.பி. 918-921-ம் ஆண்டுகளில் செதுக்க பெற்ற உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன.

முகலாயர்கள் ஆட்சி காலத்திலும், வெள்ளையர்கள் ஆட்சி காலத்திலும் பஞ்சாயத்து ஆட்சி முறை தொடர்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஊராட்சி அமைப்புகளை சீரமைக்க 1816 ஒழுங்குமுறை சட்டத்தில் தொடங்கி 1920 சென்னை உள்ளாட்சி கழக சட்டம் வரை படிப்படியாக பல சட்டங்கள் கொண்டு வந்தனர். இதனால் உள்ளாட்சி முறை பிழைத்திருந்தது.

நாம் விடுதலைக்காக போராடிய காலத்திலேயே அண்ணல் காந்தியடிகள், உண்மையான மக்களாட்சிக்கு அடித்தளம் பஞ்சாயத்து ஆட்சி முறை என்பதை வலியுறுத்தி கூறி கொண்டிருந்தார். ஆனால் 1950-ல் நமது குடியரசு அரசியல் நிர்ணய சட்டத்தை வரைந்தவர்கள், அதில் பஞ்சாயத்துக்கு உரிய இடம் தரவில்லை. மக்களின் கருத்து பஞ்சாயத்துக்கு ஆதரவாக இருந்தது. அதனால் வழிகாட்டும் நெறிமுறைகளின் 40-ம் கூறாக ஊராட்சி அமைப்பினை சேர்த்தனர்.

நாம் சமுதாய வளர்ச்சி திட்டத்தை 1950-ல் தொடங்கிய பொழுது அன்றைய தலைமை அமைச்சர் பண்டித ஜவகர்லால் நேரு ‘ஒவ்வொரு கிராமத்திலும் அரசியல் அதிகார பரவலுக்கு பஞ்சாயத்தும், பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டுறவு சங்கமும், சமுதாய விழிப்புணர்ச்சிக்கு பள்ளியும் வேண்டும்’ என்றார்.

1957-ல் பல்வந்தராய் மேத்தாக் குழு மக்களாட்சி பரவலாக்கல் அடிப்படையில் மூன்றடுக்கு பஞ்சாயத்து ஆட்சி முறையை பரிந்துரைத்தது. அதன்படி மாநில அரசுகள் சட்டங்கள் இயற்றின. 1989-ல் தலைமை அமைச்சராக இருந்த ராஜீவ் காந்தி பஞ்சாயத்து அமைப்பை சீர்திருத்தம் செய்ய சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். அது உடனே நிறைவேறவில்லை. அதுபின்னர் 1993-ல் 73-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தமாக நிறைவேறியது. இதற்காக வேண்டிய சட்டங்களை மாநில அரசுகளும் நிறைவேற்றின.

பஞ்சாயத்து ஆட்சிமுறையை செயல்படுத்துவதில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடுகள் இருக்கின்றன. குறைவான அளவிலேயே மாநில அரசுகள் அதிகாரங்களை பரவலாக்கி இருக்கின்றன. பெரும்பாலான மாநிலங்கள் ‘சட்டாம்பிள்ளை’ மனோபாவத்தோடு நடக்கின்றன.

பஞ்சாயத்து அமைப்பு முறை சட்டமாகி செயல்படுத்த பெற்ற போதிலும் மக்களிடம் போதுமான விழிப்புணர்ச்சி இல்லை. அளிக்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, தன்னாட்சி முறையின் மூலம் முன்னேற்றம் அடைய வழிநடத்த கூடியதக்க தலைவர்களை மக்கள் தெரிந்திருக்கவில்லை. அரசியல் கட்சிகளின் தலையீடு மிகுதி. லஞ்சம், ஊழல் உள்ளாட்சி முறையையும் பற்றி கொண்டன. அதிகாரிகள் பஞ்சாயத்துக்களை போதுமான அதிகாரங்களோடு செயல்பட வாய்ப்பளிக்கவில்லை.

மாநில அரசு பஞ்சாயத்தின் தேவை திட்டங்களுக்கும், வளர்ச்சி திட்டங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கவில்லை. உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பெறவில்லை. தேர்ந்தெடுக்க பெற்ற பிரதிநிதிகளுக்கு தக்க பயிற்சி அளிக்கப்படவில்லை.

பஞ்சாயத்து கட்டமைப்பை கட்டி காக்க வேண்டும். உரிய காலத்தில் தேர்தல் நடத்த வேண்டும். உண்மையான மக்களாட்சிக்கு இது பயிற்சி களமாகும். பஞ்சாயத்து நிர்வாகத்தில் பங்கேற்பவர்கள் தலைமை பண்புகளை, நிர்வாக திறன்களை பெற்றுக்கொள்வார்கள். பின்னாளில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இது பயிற்சிக்களமாகும்.

உள்ளாட்சி நிர்வாகம் நன்றாக இருந்தால், மக்களின் குடிநீர், சுத்தம், சுகாதாரம், குப்பை அகற்றல், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் தட்டுப்பாடின்றி கிடைக்கும். இப்பொழுது கிராமங்களில், நகரங்களில் உள்ள பல குறைபாடுகளுக்கு பஞ்சாயத்துகள், நகர்மன்றங்கள் இல்லாததே காரணம்.

இனியும் உள்ளாட்சி தேர்தலை ஒத்தி போடாமல் உடனடியாக நடத்துவது அரசின் கடமை. மக்கள் தங்களது உரிமைகளை பெற கடமைகளை செய்ய வேண்டும். உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டுவதும், தக்கவர்களை தேர்ந்தெடுப்பதும் மக்கள் கடமையாகும்.

- டாக்டர் மா.பா.குருசாமி

Next Story