நிதி ஆலோசனை : எல்.ஐ.சி. பாலிசியும், பல சந்தேகங்களும்..!


நிதி ஆலோசனை : எல்.ஐ.சி. பாலிசியும், பல சந்தேகங்களும்..!
x
தினத்தந்தி 3 March 2018 12:03 PM IST (Updated: 3 March 2018 12:03 PM IST)
t-max-icont-min-icon

வருமான வரி தாக்கலுக்கான நேரம் இது. மாத சம்பளம் வாங்குபவர்கள், தங்கள் சேமிப்பை உயர்த்தவும், வருமான வரியில் இருந்து விலக்கு பெறவும் புதிதாக எல்.ஐ.சி. பாலிசிகள் போடுவார்கள்.

 பாலிசியை  இப்படி அவசர கதியில்  எடுப்பவர்கள் பல விஷயங்களில் தவறு செய்யக்கூடும். குறிப்பாக ‘நாமினி’ விஷயத்தில் தடுமாறுவார்கள். அதனால் பாலிசி குறித்த சந்தேகங்களை தெளிவுப்படுத்துவதற்காக, எல்.ஐ.சி. நிறுவனத்தின் தெற்கு மண்டல மேலாளர் தாமோதரனை சந்தித்தோம். அவர் நாமினி நியமனத்தில் இருக்கும் சிக்கல்களையும், புதிதாக அறி முகப்படுத்தப்பட்டிருக்கும் ‘கேன்சர் கேர்’ காப்பீட்டு திட்டம் பற்றியும் விளக்கமாக பேசினார்.

பாலிசி விஷயங்களில் மக்கள் செய்யும் தவறுகள் என்ன?

“பாலிசி தொகையை முடிவு செய்வதில் தான் மக்கள் அதிகமாக தவறு செய்கிறார்கள். 50 ஆயிரம், ஒரு லட்சம், இரண்டு லட்சம்... போன்ற மதிப்புகளில் பாலிசி எடுத்தால், அது எந்த வகையிலும் பயன்தராது. அதனால் குடும்ப தலைவரின் இழப்பை சரிக்கட்டும் வகையில், பாலிசி தொகையை நிர்ணயிக்கவேண்டும். இல்லையேல் இழப்பீடு தொகை, எந்த வகையிலும் பயனளிக்காது. அடுத்ததாக பயன்பெறுபவர் (நாமினி) விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு, ஒரு இளைஞர் புதிய காப்பீடு தொடங்கும்போது நாமினியாக அவரது பெற்றோரை குறிப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் சில வருடங்களிலேயே அவருக்கு திருமணமாகி, குழந்தைகள் பிறக்கிறது. இத்தகைய சூழலில் அவர் திடீர் விபத்தில் இறந்துவிட்டால், காப்பீட்டு தொகை முழுவதும், திருமணத்திற்கு முன்பு அவர் நாமினியாக குறிப்பிட்ட பெற்றோருக்கே செல்லும். அவரது இழப் பினால் வாடும் மனைவிக்கு எந்தவித பலனும் சென்றடையாது. அதனால் தான் நாமினி விஷயத்தில் கவனமாக இருக்க சொல்கிறோம். திருமணம், விவாகரத்து... என வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் கவனமாக இருந்தால், நம்மை சார்ந்தவர்கள் பயனடைவார்கள்”

தனித்துவமான பாலிசிகள் ஏதாவது இருக் கிறதா? அதுபற்றி விளக்கமாக கூறுங்கள்?

“புற்றுநோய், சமீப காலங்களாக பூதாகரமாக மாறிவருகிறது. யாருக்கு புற்று நோய் வரும், யாருக்கு வராது..? என்ற வரைமுறையின்றி, நோய் பாதிப்பு எல்லாதரப்பினருக்கும், எல்லா வயதினருக்கும் பரவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு எல்.ஐ.சி. நிறுவனம் ‘கேன்சர் கவர்’ என்ற பாலிசியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த பாலிசியை குறைந்த பிரிமியத்தில் எடுத்தவர்கள், புற்று நோயால் சந்திக்கும் மிக கூடுதலான செலவை, மிக எளிதில் பெறலாம். எல்.ஐ.சி.யுடன் இணைந்து போராடலாம். சமீபத்தில் அறிமுகமாகியிருக்கும் இந்த பாலிசிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக் கிறது”

ஒருவர் எத்தனை பாலிசிகள் போடலாம்?


“காப்பீட்டு திட்டங்களை பொருத்தமட்டில் எந்தவிதமான வரையறையும் இல்லை. அதனால் ஒருவர் எத்தனை பாலிசிகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். குடும்பங்களுக்கான பாலிசி, குழந்தைகளின் கல்விநிதி பாலிசி, மருத்துவ பாலிசி, ஓய்வு நிதி பாலிசி, வயதானோருக்கான பாலிசி... என புதுப்புது பாலிசி திட்டங்களை அறிமுகப் படுத்திக்கொண்டே இருப்பதால், எல்.ஐ.சி. பந்தத்தில் மக்கள் இணைந்து கொண்டே இருக்கிறார்கள். மேலும் எல்.ஐ.சி. மக்களுடைய நிறுவனம். மக்களின் காப்பீட்டு பணத்தில் கிடைக்கும் லாப பணத்தை, ‘போனஸ்’ முறையில் மக்களுக்கே திருப்பி கொடுத்துவிடுவதால், மக்கள் எல்.ஐ.சி.யுடன் இணைந்திருக்கிறார்கள். அதனால் தான் புதுப்புது காப்பீட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டாலும், மக்கள் எல்.ஐ.சி. நிறுவனத்தை தேடி வருகிறார்கள்” என்றவர், ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டதால், பாலிசி முதிர்வின் போது ஆதார் அட்டையுடன் அணுகுமாறு அறிவுறுத்துகிறார். மேலும் பாலிசியுடன் ஆதார் எண்ணை இணைப்பவர்களுக்கு பல நன்மைகள் உண்டு என்பதையும் நினைவுபடுத்துகிறார்.

Next Story