காதல் ஓய்வதில்லை


காதல் ஓய்வதில்லை
x
தினத்தந்தி 3 March 2018 1:46 PM IST (Updated: 3 March 2018 1:46 PM IST)
t-max-icont-min-icon

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். இவர் சங்ககாலத்து அரசன். அதுமட்டுமின்றி சங்க காலப் புலவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.

பூதப்பாண்டியன் இயற்றிய இரண்டு பாடல்கள், அகநானூறு மற்றும் புறநானூறு இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. இவரது மனைவி பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு. இவரும் ஒரு புலவரே. தன்னுடைய கணவன் இறந்ததும், பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறுவதை விவரிக்கும் பாடல்கள் புறநானூற்றில் இடப்பெற்றுள்ளன. அந்தப் பாடல்களில் இருந்து எழுந்த கற்பனையே, இங்கே ஒரு கதையாக விரிந்து கிடக்கிறது.

காலம்: கடைச் சங்கம்.

வானம் துக்கத்தில் பீறிட்டு அழுதுவிடுவது போல, கருமேகங்களால் சூழப்பட்டிருந்தது.

ஒரு போர்க்களம் அன்று அமைதியாய் காணப்பட்டது.

ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் தவப்புதல்வன் சடலமாய் கிடக்க, அந்த உடலருகே ஒரு மங்கை பீறிட்டு அழுதுகொண்டிருந்தாள்.

பிணம் தின்னிக் கழுகுகள் கூட, அந்த சடலத்தைச் சீண்டவில்லை. அவைகளுக்குத் தெரியும்... ஒவ்வொரு போர் முடிவின் போதும், தங்களுக்கு உணவாய் எதிரிநாட்டு வீரர்களின் சடலத்தை அள்ளிக்கொடுத்த ஒரு மாபெரும் வீரன் அங்கு படுத்து உறங்குகிறார் என்று. நன்றி உள்ளவை அவை!

ஒரு நாட்டின் மன்னன் இறந்தால் அது நாட்டிற்கும் வீட்டிற்கும் தான் ஆபத்து. என்றாலும், நாட்டை விடவும், நாட்டு மக்களை விடவும் வீட்டில் உள்ள உறவுகளுக்கு அது மிகவும் பேரிழப்பானது. அதுவும் போன உயிர் ஒருவரின் அன்புக்குரியவருடையதாக இருப்பின் அந்த இழப்பின் வலியை உணர, நாம் அவர்களாக மாறியிருக்க வேண்டும். அந்த வகையில் தன் உயிருக்கு உயிரான அன்புக் கணவன், ஆசைக் காதலன், தன் கண் முன்னே உயிரற்ற சடலமாக மாறி, அந்த மங்கையை மீளாத் துயரில் தள்ளிவிட்டு விட்டான். கனிந்த நெஞ்சமுடைய அவளால், அந்த துயரைத் தாங்க முடியவில்லை. சுற்றி இருந்த போர் வீரர்களுக்கும், தளபதிகளுக்கும் கூட அந்த மங்கையின் கண்ணீரால் துக்கம் நெஞ்சை பிசைந்தது.

அவள் அலறினாள்!

“ஏனடா என்னை விட்டு, நீ மட்டும் சென்றாய்? நாம் காதலித்த ஒவ்வொரு நொடியிலும், நாம் இருவரும் எப்பொழுதும், எங்கும் சேர்ந்தே செல்ல வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். அதை நீ மட்டும் ஏன் மீறினாய் என் செல்லமே? என் மனம் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்று சொல்வாயே? அதை இவ்வாறு தான் நீ எனக்கு கற்றுத் தரவேண்டுமா? உயிர் துறக்கும் முன் நீ என்னை நினைத்ததனால் அல்லவா, எனக்கு.. ஏதோ மனச் சங்கடம் ஏற்பட்டு போர்க்களத்துக்கு ஓடோடி வந்தேன். ஒரு சில நொடிகள் உன் உயிரைப் பிடித்து வைத்திருந்தால், உன் அழகு முகத்தில் முத்தமிட்டு, உன் அடர் கூந்தல் தலையை வருடிக் கொடுத்து, நானும் உன்னுடனே உயிர் விட்டிருப்பேனே என் செல்லமே!!!”

அவளது அன்பு கலந்த வார்த்தைகள்.. அங்கே மடிந்து கிடந்தது ஒரு மன்னன் என்பதை விட, ஒரு காதலன் என்பதை அனைவருக்கும் பறைசாற்றியது.

பாண்டிய நாடு

‘இல்லை’ என்று சொல்வோருக்கு, வாரி வழங்கிய வள்ளல்கள் நிறைந்த பாண்டிய நாடு.. முத்தமிழ் வளமும், புலவர் பெருமக்களும், வையம் வியக் கும் வாணிபமும், பண்பும் அன்பும் கொண்ட மக்கள் நிறைந்த பாண்டிய நாடு.. அன்று எந்த சலசலப்பும் இல்லாமல் புயலுக்குப் பின் உண்டான அமைதியைப் போல் கிடந்தது. தெருக்களில் பிள்ளைகள் இல்லை. பெண்டுகள் இடத்தில் அழகும் கம்பீரமும் இல்லை. வறுமையின் காரணமாக பாலுக்கு ஏங்கி அழும் பிள்ளையைப் போல, பாண்டிய நாடே தன் மன்னனை இழந்து அழுதது. மதுரை வீதிகள் எல்லாம் அமங்கலமாய் காட்சி அளித்தன. எங்கும் விளரிப் பண் (இரங்கல் பண்) ஒலித்துக்கொண்டிருந்தது.

ஒரு நாட்டின் மூத்தோனை, ஒரு மன்னனை, விறகுப் படுக்கையின் மேல் படுக்க வைத்து சடலமாய் பார்த்தது அந்த நாடு. பெண்களின் அலறல்களும், கிழவிகளின் ஒப்பாரிகளும், ஏதும் அறியாப் பிஞ்சுகளின் கதறல்களும், சுற்றி இருந்த... எதற்கும் அஞ்சாத படை வீரர்களையும் கூட கலங்க வைத்தது.

மங்கை அவள், தலைவிரிக் கோலமாய், வளையல் உடைத்த வெற்றுக் கைகளுடன், மை அழிந்த அழுத கண்களுடன், அவன் சிதை அருகே நின்றாள். அவன் முகம் நோக்கினாள். இருவரும் காதலித்த நாட்கள், கூடிப் பிணைந்த வேளைகள், அவன் புன்சிரிப்பு, அவன் கம்பீரம், அவர்கள் ரசித்த இடங்கள், சிறுசிறு குறும்புகள் என்று காதலித்த நாட்கள் முழுவதுமாக கண் முன்னே வந்து சென்றன. ஒரு வேளை மன்னனை, தன் காதலனை, புதைப்பதற்கு உத்தேசித்து இருந்தால், தானும் ஒரே தாழியில் புதைக்கப்பட விரும்பி இருப்பாள் அவள். ஆனால் அவனோ மாமன்னன். பாண்டிய நாட்டின் அரசன். அவன் சிதைக்கு எரியூட்ட வேண்டும் என்பது வழக்கம்.

நேரம் நெருங்கியது.

விளரிப் பண் ஒலி நிறுத்தப்பட்டு, முரசும், பறை ஒலியும் தொடங்கி வேகம் பிடித்தன. அவள் முடிவெடுத்துவிட்டாள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சுற்றி இருந்த பெரியோர்களுக்கு சந்தேகம் வர அவளைத் தடுத்தனர். சீறினாள்!!. அவளை மீறி பேசுவதற்கு அங்கு யாருக்கும் துணிவில்லை. ஏனெனில் அவள் அந்நாட்டின் அரசி. மருதப் பறை படுவேகம் பிடித்து அலறியது.

எரியூட்டி கொண்டுவரப்பட்டது. அப்போதும் எந்த ஒரு சலனமும் அவள் முகத்தில் இல்லை. லேசான புன்னகை, ஒரு மன நிறைவு அவள் முகத்தில். காக்கும் கடவுள்களை வேண்டி, பாண்டிய நாட்டின் சக்கரவர்த்தியின் உடலுக்கு தீயிடப்பட்டது. அக்னி பிழம்புகள் கம்பீரமாய் எரியத்தொடங்கின.

அந்த அக்னி ஜூவாலைக்குள் அவள் காதலனின் தோற்றம்.. சிறு புன்னகையுடன், அவன் ஆசைக் காதலியை ஒரு முறை ஏக்கத்துடன் பார்த்தான். அவள் பெரிதாய் சிரித்தாள். அருகில் இருந்தவர்கள் அச்சிரிப்பில் நடுங்கினார்கள். சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்தாள். இந்த நாடு செழிப்பாய் விளங்கும் என்று அவளுக்கு நம்பிக்கை இருந்தது. அவள் தேசத்தின் நலன் கருதி, கண் மூடி வேண்டினாள்.

கண் திறந்தபோது, அக்னியில் இருந்து தன் காதலன் அவளை கை நீட்டி அழைத்தான். அடுத்த நொடி, அவள் தன் கணவனின் உடல் எரியூட்டப்பட்ட அக்னிக்குள் புகுந்திருந்தாள்.

தன் அன்பு கணவனுடன் உடன்கட்டை ஏறிய அந்த கற்பில் சிறந்தவளின் பெயர் பெருங்கோப்பெண்டு.

அவள் காதலன், பாண்டிய நாட்டின் தலை சிறந்த அரசன், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்.

-ஷியாம்

Next Story