மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.6,833 கோடி கடன் வழங்க இலக்கு


மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.6,833 கோடி கடன் வழங்க இலக்கு
x
தினத்தந்தி 4 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 11:34 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.6,833 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டின் 3-வது காலாண்டுக்கான மாவட்ட ஆலோசனைக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி நபார்டு வங்கியின் மூலம் 2018-19-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் உதவி திட்ட கையேட்டை வெளியிட்டார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காணக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. மாநிலத்தின் மொத்த விவசாய உற்பத்தியில் 10 சதவீதம் விழுப்புரம் மாவட்டத்தில் உற்பத்தியாவதால் இங்கு மதிப்புக் கூட்டு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.

கல்வி, வீட்டு வசதி, சிறு, குறு தொழில்களில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் வங்கி அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 2018-19-ம் ஆண்டுக்கான நபார்டு வளம் சார்ந்த கடனுதவி திட்ட நிதி ரூ.6,833.38 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2017-18 ஆண்டை விட 10.73 சதவீதம் கூடுதலாகும்.

பயிர் கடனுக்கு 49.76 சதவீதம், நீண்டகால கடனுக்கு 18.90, விவசாய உள்கட்டமைப்பு வசதிக்கு 5.60, இதர விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு 1.50, சிறு, குறு தொழில்களுக்கு 5.08, ஏற்றுமதி, கல்வி, வீட்டுவசதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொறுப்பு குழுக்கள் கடனுக்காக 19.16 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் கால்நடை வளர்ப்பு, உள்நாட்டு மீன் வளர்ப்பு, பட்டு வளர்ப்பு மற்றும் பண்ணை சாரா தொழில் நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க போதுமான கடன்களை வங்கிகள் வழங்க வேண்டும். புதுமையான தொழில்நுட்பங்களை தக்க வைப்பதற்காக விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story