திருமணம் செய்வதாக ஆசைகாட்டி பண மோசடி: நடிகை சுருதி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை


திருமணம் செய்வதாக ஆசைகாட்டி பண மோசடி: நடிகை சுருதி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 March 2018 5:00 AM IST (Updated: 4 March 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

பட்டதாரி வாலிபர்களை திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி பண மோசடி செய்த நடிகை சுருதி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் நடிகை சுருதி (வயது 21). இவர் அதிக சம்பளத்தில் வேலை பார்க்கும் என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரி வாலிபர்களின் விவரங் களை அறிந்து, திருமண தகவல் மையத்தில் தன்னுடைய அழகிய தோற்ற புகைப்படங்களை பதிவிட்டு அவர்களை பெண் பார்க்க வருமாறு கூறியுள்ளார். இதில் மயங்கி தன்னை தேடி வரும் வாலிபரை தன்வசப்படுத்தி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டினார்.

அதன் பின்னர் அவர்களின் தொடர்பை துண்டித்து கொள்வார். இந்த மோசடியில் சுருதியின் தாய் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இவர்கள் 3 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருண்குமாரிடம் ரூ.22 லட்சத்து 43 ஆயிரம், சென்னையை சேர்ந்த விஜய் உள்பட பலரிடம் ரூ.2 கோடிக்கும் மேல் சுருதி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து சுருதியும், அவரது குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான நகல்களை கோவை சிறையில் போலீஸ் அதிகாரிகள் நேற்று வழங்கினார்கள்.

அப்போது சித்ரா திடீரென்று மயக்கம் அடைந்தார். அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Next Story