சேந்தமங்கலம் அருகே இரவிலும் களை கட்டிய பேளுக்குறிச்சி சந்தை
சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி சந்தையில் இரவு நேரத்திலும் வியாபாரம் களை கட்டி உள்ளது.
சேந்தமங்கலம்,
சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி சந்தையில் இரவு நேரத்திலும் வியாபாரம் களை கட்டி உள்ளது.
சேந்தமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சனிக்கிழமைகளில் வாரச்சந்தை கூடும். ஒரு ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே நடைபெறும் இந்த சந்தைக்கு, ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, சேலம், புதுச்சத்திரம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பல தரப்பட்ட பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் விற்பதால் பெண்கள் கூட்டம், கூட்டமாக இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு பேளுக்குறிச்சி வாரச்சந்தை நேற்று முன்தினம் இரவே கூடியது. அன்று இரவே வியாபாரம் சுறுசுறுப்பாக தொடங்கி நேற்று இரவு வரை தொடர்ந்து நடந்தது.
இரவிலும் விற்பனை களை கட்டிய பேளுக்குறிச்சி சந்தைக்கு, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், மதுரை, சென்னை உள்பட பல மாவட்டங்களில் இருந்து சரக்கு வேன், மினிலாரி, பஸ் போன்ற வாகனங்களை வாடகைக்கு பிடித்து கொண்டு பெண்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு ஒரு செட் என்ற கணக்கில் சீரகம் 4 படி, வெந்தயம் 4 படி, சோம்பு 4 படி, கடுகு 4 படி, மிளகு ஒரு படி ஆகியவை சேர்த்து வழங்கப்பட்டது. (ஒரு படி என்பது ஒரு கிலோகிராம் என்று கணக்கீடாக கொள்கின்றனர்).
இந்த ஆண்டு ஒரு செட், ரூ.1,200-க்கு நேற்று முன்தினம் முதல் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு ஒரு செட் ரூ.1,100 வரை விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த சந்தைக்கு வருபவர்கள், தங்களின் வாகனங்களை பேளுக்குறிச்சி சாலையோரங்களில் நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அந்த வாகனங்களை நிறுத்துவதற்கென்று தனியாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் சந்தை பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.