கலந்தாய்வு மூலம் பொதுமாறுதலை நடத்த வேண்டும் வணிகவரி பணியாளர் சங்க பொதுக்குழுவில் வலியுறுத்தல்


கலந்தாய்வு மூலம் பொதுமாறுதலை நடத்த வேண்டும் வணிகவரி பணியாளர் சங்க பொதுக்குழுவில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 March 2018 4:00 AM IST (Updated: 4 March 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

கலந்தாய்வு மூலம் பொதுமாறுதலை நடத்த வேண்டும் என்று வணிகவரி பணியாளர் சங்க பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். பொருளாளர் சரவணன் அறிக்கை வாசித்தார். செயலாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தை மாநில செயலாளர் பத்ரிநாத் தொடங்கி வைத்து பேசினார்.

மாநில துணை தலைவர்கள் மூர்த்தி, வளனரசு, துணை வணிகவரி அலுவலர் சங்க செயற்குழு உறுப்பினர் அருள் ஜஸ்டின், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வணிகர்களின் எண்ணிக்கை இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது வணிகவரித்துறையில் மறுசீரமைப்பினை மேற்கொள்ளும்போது சங்க நிர்வாகிகளையும் அக்குழுவில் இணைத்துக்கொண்டு முறையான மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்.

வணிகவரித்துறையில் பொதுமாறுதலை கலந்தாய்வு முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பணி நிலைகளிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக துறையில் நிலவிவரும் முதுநிலை பிரச்சினைகளுக்கு காரணமாக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் ஆவணங்களை தாக்கல் செய்யாமல் ஊழலுக்கு வித்திட்ட அலுவலர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் நிறைவுரை ஆற்றினார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story