மருத்துவமனைகளை பழைய இடத்திற்கே மாற்றக்கோரி பேய் விரட்டும் நூதன போராட்டம்


மருத்துவமனைகளை பழைய இடத்திற்கே மாற்றக்கோரி பேய் விரட்டும் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 4 March 2018 4:30 AM IST (Updated: 4 March 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனைகளை பழைய இடத்திற்கே மாற்றக்கோரி புதுக்கோட்டையில் பேய் விரட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராணியார் மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடை பண்ணை அருகே புதிதாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராணியார் மகப்பேறு மருத்துவ மனைகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

இதனால் தற்போது புதுக்கோட்டை நகரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராணியார் மகப்பேறு மருத்துவமனை கட்டிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராணியார் மகப்பேறு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயக்கக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள மருத்துவ இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று மருத்துவ இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் பகுதியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். இதற்கு கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் நியாஸ் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் கலைமுரசு, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அப்துல்ஜப்பார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராணியார் மகப்பேறு மருத்துவமனை இருந்த இடத்தில் தற்போது மருத்துவமனை செயல்படாததால் அங்குள்ள கட்டிடங்களில் பேய், பிசாசுகள் தங்கி உள்ளது எனக்கூறி பேய் விரட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பழைய இடத்திற்கே மருத்துவமனைகளை மாற்றக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கிருந்து மருத்துவ இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அப்போது பழைய பஸ் நிலையம் பகுதியில் புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உள்பட 210 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story