அரசு மருத்துவமனையில் கணினி கோளாறு: மாத்திரைகளை பதிவு செய்ய நீண்ட வரிசையில் நின்ற நோயாளிகள்


அரசு மருத்துவமனையில் கணினி கோளாறு: மாத்திரைகளை பதிவு செய்ய நீண்ட வரிசையில் நின்ற நோயாளிகள்
x
தினத்தந்தி 4 March 2018 4:30 AM IST (Updated: 4 March 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு மருத்துவமனையில் 4-வது நாளாக கணினி கோளாறு காரணமாக, இருதய நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் விவரத்தை தாளில் பதிவு செய்து கொடுத்தனர். இதனால் நீண்ட வரிசையில் நின்ற நோயாளிகள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் நோயாளியின் பெயர், முகவரி மற்றும் அவர்களின் நோய் விவரங்கள் முழுவதும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து மாத்திரைகளை கணினியில் பதிவு செய்து கொடுக்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை முழுவதும் கணினிகளில் கடந்த 28-ந்தேதி முதல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவைகள் இயங்கவில்லை. இதன்காரணமாக நோயாளிகளின் அனுமதி சீட்டு, மாத்திரை மற்றும் மருந்துகள் பற்றிய விவரத்தை கணினியில் பதிவு செய்ய முடியவில்லை. தாளில் எழுதி கொடுப்பதால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இருதய நோய்களுக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும், சிறுநீரக நோய்களுக்கு திங்கள், புதன்கிழமைகளிலும், நரம்பியல் நோய்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விபத்து மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள மருந்தகத்தில் 1 மாதத்திற்கான மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு மையத்தில் ஊழியர்கள் நோயாளிகளுக்கு மாத்திரைகளை கணினிகளில் பதிவு செய்து கொடுப்பது வழக்கம்.

ஆனால் நேற்று கணினி கோளாறு காரணமாகவும், மாத்திரைகள் பற்றிய விவரத்தை தாளில் எழுதி கொடுத்ததாலும், மருந்தகத்தில் மருந்தாளர்கள் பற்றாக்குறையாலும் இருதய நோயாளிகளுக்கு மாத்திரை வழங்க தாமதம் ஏற்பட்டது. மாத்திரைகளை பதிவு செய்யும் இடத்தில் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் நேற்று காலை முதல் நீண்ட வரிசையில் நின்றதால் கடும் அவதிக்குள்ளானார்கள். நோயாளிகள் இதுகுறித்து மாத்திரைகள் பதிவு செய்யும் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கணினி கோளாறால் மருத்துவமனை பணிகளிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து நோயாளிகள் கூறுகையில், “கணினியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை விரைவில் சரிசெய்ய மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கும் இடத்தில் மருந்தாளர்களையும், அனுமதி சீட்டு வழங்கும் இடத்திலும், மாத்திரைகளை கணினியில் பதிவு செய்து கொடுக்கும் இடத்திலும் ஊழியர்களைகூடுதலாக நியமிக்க வேண்டும்” என்றனர். 

Next Story