சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழக அனைத்து கட்சியினர் கேரள முதல்-மந்திரியை சந்திக்க முடிவு


சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழக அனைத்து கட்சியினர் கேரள முதல்-மந்திரியை சந்திக்க முடிவு
x
தினத்தந்தி 4 March 2018 4:15 AM IST (Updated: 4 March 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

சிறுவாணி ஆற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டும் பிரச்சினையை யொட்டி கேரள முதல்-மந்திரியை அனைத்து கட்சியினர் சந்தித்து முறையிட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கோவை,

சிறுவாணி ஆற்றின் குறுக்கே சோலையூரில் கேரள அரசு தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்துவதற்கான, ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டு குழு ஒருங்கிணைப்பாளரும், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளருமான கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். தி.மு.க மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, தி.மு.க மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசனை கூட்டத்தில், சிறுவாணி ஆற்றில் கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை வீணாக திறந்துவிட்டது குறித்தும், கேரளா பகுதியில் சிறுவாணி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சிறுவாணி மற்றும் பவானி ஆறு பிரச்சினை தொடர்பாக வருகிற 7-ந் தேதி அனைத்து கட்சிகளும் இணைந்து தடுப்பணை கட்டும் இடத்தை பார்வையிடுவது என்றும் அதன் பிறகு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்பின்னரும் தடுப்பணை கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றால், அனைத்து கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்து கோ வையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

கேரள அரசு சிறுவாணி- பவானி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே இரண்டு தடுப்பணைகள் கட்டியநிலையில், 3-வதாக, தோட்டத்துறை பூலப்பட்டி என்னும் இடத்தில் தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 தடுப்பணைகளை கேரள அரசு கட்டியபோதும், அ.தி.மு.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், தி.மு.க மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன், ம.தி.மு.க மாவட்ட துணை அமைப்பாளர் ராஜீவ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல தலைவர் சுசி.கலையரசன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தங்கராஜ், தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதி தமிழர் பேரவை, ஆம்ஆத்மி கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண் டனர்.

Next Story