சாலையோரம் பிணமாக கிடந்தவர் வழக்கில் திடீர் திருப்பம்: தொழிலாளி அடித்து கொல்லப்பட்டது அம்பலம்


சாலையோரம் பிணமாக கிடந்தவர் வழக்கில் திடீர் திருப்பம்: தொழிலாளி அடித்து கொல்லப்பட்டது அம்பலம்
x
தினத்தந்தி 4 March 2018 3:30 AM IST (Updated: 4 March 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி வாலிபர் இறந்த வழக்கில், திடீர் திருப்பமாக அவர் அடித்து கொல்லப்பட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னாளபட்டி,

திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் 4 வழிச்சாலையில் கலிக்கம்பட்டி பிரிவு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அதனை பார்த்தவர்கள் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அம்பாத்துரை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையொட்டி விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இதனால் வாகனம் மோதி வாலிபர் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவருடைய உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இறந்தவரின் உடலை புகைப்படம் எடுத்த போலீசார், அதனை நோட்டீசில் அச்சடித்து வெள்ளோடு, கலிக்கம்பட்டி, சின்னாளபட்டி ஆகிய பகுதிகளில் ஒட்டினர். அப்போது இறந்து கிடந்தவர் சின்னாளபட்டியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 30) என்பதும், தச்சுத்தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் வாகனத்தில் அடிபட்டு இறக்கவில்லை என்றும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது செட்டியப்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வைத்து சுப்புராஜிடம், லட்சுமணன் (27) என்பவர் தகராறு செய்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து லட்சுமணனிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சென்றனர்.

ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், லட்சுமணன், தனது நண்பர்களான மேட்டுப்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன் (23), ராஜா (23), பாபு (22) ஆகியோருடன் செட்டியப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு மதுகுடித்து கொண்டிருந்த சுப்புராஜுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 4 பேரும் சேர்ந்து சுப்புராஜை சரமாரியாக தாக்கிவிட்டு சென்று விட்டனர். சுப்புராஜ் அங்கிருந்து புறப்பட்டு கலிக் கம்பட்டி பிரிவுக்கு வந்துள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேரும் சேர்ந்து மீண்டும்அவரை தாக்கியுள்ளனர்.

இதில் சுப்புராஜ் இறந்து விட்டார். இவர் வாகன விபத்தில் இறந்ததாக தெரிய வேண்டும் என்பதற்காக அவருடைய உடலை யாருக்கும் தெரியாமல் சாலையோரத்தில் போட்டுவிட்டு 4 பேரும் தப்பி சென்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து லட்சுமணன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன், கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story