திருப்பதியில் கைது செய்யப்பட்ட 84 பேரும் பஸ்களில் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்


திருப்பதியில் கைது செய்யப்பட்ட 84 பேரும் பஸ்களில் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்
x
தினத்தந்தி 4 March 2018 4:30 AM IST (Updated: 4 March 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதியில் கைது செய்யப்பட்ட 84 பேரும் தமிழகம் அழைத்துவரப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பத்தூர்,

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களும் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து வேலூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ரமேஷ், ஆம்பூர் சமூகநல பாதுகாப்பு திட்ட தாசில்தார் முரளிதரன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், போலீசார் அடங்கிய குழுவினர் 2 பஸ்களில் திருப்பதிக்கு சென்றனர். திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கைது செய்யப்பட்ட 84 தமிழர்களையும் தாசில்தார் அடங்கிய குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

84 பேரும் 2 பஸ்களில் நேற்று மாலை தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். 84 பேர்களில் திருப்பத்தூர் தாலுகாவை சேர்ந்த 38 பேர், அணைக்கட்டு தாலுகாவை சேர்ந்த 4 பேரும் என 42 பேர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 41 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் மட்டும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

திருப்பத்தூர் தாலுகாவை சேர்ந்த 38 பேரும், திருப்பத்தூர் சப்–கலெக்டர் பிரியங்கா பங்கஜம், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஏசுராஜ், மாவட்ட வனத்துறை அலுவலர் தேஜஸ்வி, தாசில்தார் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேபோல் அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தையை சேர்ந்த ரமேஷ், விஜயன், தொங்குமலையை சேர்ந்த தசரதன், பட்டிக்கொல்லையை சேர்ந்த பாண்டு ஆகிய 4 பேரும் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அணைக்கட்டு தாசில்தார் குமார், 4 பேரின் முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற்று கொண்டு அறிவுரைகள் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.


இதே போல திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம், செங்கம் தாலுகாவைச் சேர்ந்த 41 பேரை போளூர் தாசில்தார் பாலாஜி நேரில் சித்தூர் சென்று அழைத்து வந்தார். இவர்கள் தொம்மாரெட்டி, நெல்லிமரத்தூர் உள்ளிட்ட பகுதி கிராமங்கள் மற்றும் செங்கம் தாலுகா ஊர் கவுண்டனூர் பகுதிகளை சேர்ந்தவர்களாவர் ஆவர். அவர்கள் கூறிய முகவரியின் அடிப்படையில், அவர்களை அவரவர் பகுதிக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.


Next Story