கார் பள்ளத்தில் கவிழ்ந்து என்ஜினீயர் பலி மனைவி-மகள்கள் படுகாயம்


கார் பள்ளத்தில் கவிழ்ந்து என்ஜினீயர் பலி மனைவி-மகள்கள் படுகாயம்
x
தினத்தந்தி 4 March 2018 3:45 AM IST (Updated: 4 March 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

துவரங்குறிச்சி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் என்ஜினீயர் பலியானார். அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் படுகாயமடைந்தனர்.

துவரங்குறிச்சி,

தஞ்சாவூர் காவேரிநகர் 7-வது தெருவை சேர்ந்தவர் வினோத் மெய்யப்பன் (வயது 30). இவர் சென்னை தரமணியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கீதாலட்சுமி (25), மகள்கள் வைஷாலி (4), மீனாட்சி (5 மாத கைக்குழந்தை). மீனாட்சி பிறந்ததில் இருந்து கீதாலட்சுமி மதுரையில் உள்ள தாய்வீட்டில் தான் இருந்து வந்தார். இந்நிலையில் மதுரையில் உள்ள மனைவி மற்றும் மகள்களை ஒரு காரில் அழைத்துக்கொண்டு, நேற்று மாலை தஞ்சாவூர் நோக்கி வினோத் மெய்யப்பன் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார்.

மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி கல்லுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

என்ஜினீயர் பலி

இந்த விபத்தில் 4 பேரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வினோத் மெய்யப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story