கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது


கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 4 March 2018 4:00 AM IST (Updated: 4 March 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

திருச்சி,

திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான அனுக்ஞை மற்றும் விக்னேஸ்வர பூஜைகள் நேற்று அதிகாலை தொடங்கியது. பின்னர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் முதல் கால யாகபூஜை பூர்ணாஹுதியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகபூஜை, மாலை 5.30 மணிக்கு மேல் மூன்றாம் கால யாகபூஜை நடக்கிறது.

கும்பாபிஷேகம்

நாளை அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை தொடங்குகிறது. 6.30 மணிக்கு மேல் கடம் புறப்படுகிறது. காலை 7 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் மூலஸ்தானம் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி விமானங்களில் புனிதநீர் ஊற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து தீபாராதனை காட்டி பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. பின்னர் தங்கத்தேர் புறப்பாடும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள். 

Next Story