மின்துறை ஊழியர்களுக்கு 26 சதவீத சம்பள உயர்வு மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


மின்துறை ஊழியர்களுக்கு 26 சதவீத சம்பள உயர்வு மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 4 March 2018 2:45 AM IST (Updated: 4 March 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

மின்துறை ஊழியர்களுக்கு 26 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

மின்துறை ஊழியர்களுக்கு 26 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

கர்நாடக மின்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

26 சதவீத சம்பள உயர்வு

மின்துறை ஊழியர்கள் 38 சதவீத ஊதிய உயர்வு வழங்குமாறு கேட்டனர். ஆனால் மின்சார விநியோக நிறுவனங்களுக்கு நிதிச்சுமை ஏற்படக்கூடாது என்ற காரணத்தால் அதை குறைக்குமாறு ஊழியர்களிடம் கூறினேன். இது தொடர்பாக தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 26 சதவீத சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்தது. இதை ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தற்போது மின்துறை ஊழியர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது. இனி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படும். இந்த சம்பள உயர்வால் மின்சாரத்துறைக்கு ரூ.604 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். மேலும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய உயர்வால் ரூ.240 கோடி நிதிச்சுமை ஏற்படும்.

மின்கட்டணம் உயர்வு?

இந்த சம்பள உயர்வால் குறைந்தபட்ச ஊதியம் ரூ.16 ஆயிரத்து 370 ஆகவும், அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 240 ஆகவும் இருக்கும். அதே போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்து 185 முதல் அதிகபட்சமாக ரூ.61 ஆயிரம் வரை கிடைக்கும். இந்த சம்பள உயர்வால் ஏற்படும் கூடுதல் நிதிச்சுமையை மின்துறை நிறுவனங்கள் ஏற்க வேண்டுமா? அல்லது மாநில அரசு நிதி உதவி வழங்க வேண்டுமா? என்பது குறித்து கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்யும்.

சம்பள உயர்வால் ஏற்படும் நிதிச்சுமையை ஈடுகட்ட மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அந்த ஆணையம் தான் தீர்மானிக்க வேண்டும். மின்சார வினியோக நிறுவனங்களில் உள்ள காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களில் கன்னடர்களுக்கு அநியாயம் ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும். மின் கம்பங்களை கண்ட இடங்களில் போட்டு வீணடிப்பதை தடுக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

ஒப்பந்தம்

முன்னதாக மந்திரி டி.கே.சிவக்குமார் முன்னிலையில் சம்பள உயர்வு தொடர்பாக மின்சார துறைக்கும், ஊழியர்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

Next Story