போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடந்த விசாரணை நிறைவு


போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடந்த விசாரணை நிறைவு
x
தினத்தந்தி 4 March 2018 4:00 AM IST (Updated: 4 March 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடந்த விசாரணை நிறைவடைந்தது.

சென்னை, 

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் கடந்த மாதம் 9-ந்தேதி விசாரணையை தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 24 மற்றும் 28-ந்தேதி விசாரணை நடந்தது. விசாரணையில் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக வாதாடிய வக்கீல்கள், ஊழியர்களுக்கு 2.57 கணக்கீட்டு காரணி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றனர். அதற்கு அரசு தரப்பு வக்கீல்கள், 2.44 கணக்கீட்டு காரணி ஊதிய உயர்வு தான் வழங்க முடியும். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. இதற்கு சில தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன என்று வாதிட்டனர்.

விரைவில் அறிக்கை தாக்கல்

தொடர்ந்து வாதங்கள் முடிவடையாமல் இருந்ததால், நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை 4 மணி வரை நடந்தது.

இருதரப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிந்ததாகவும், இதுதொடர்பான அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை ஐகோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்ய இருப்பதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பின்னர் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்து கழகங்களின் தலைவர் சார்பில் அரசு தரப்பு வக்கீல் கடுமையான பொருளாதார நஷ்டம் இருக்கிறது. சம்பளம் கொடுக்க கூடிய சக்திகள் இல்லை என்று வாதிட்டார்.

தீர்ப்புக்கு காத்திருக்கிறோம்

போக்குவரத்து ஊழியர்களுக்கு இதர ஊழியர்களுக்கு என்ன ஊதிய உயர்வு வழங்குகிறீர்களோ? அதை வழங்குங்கள் என்று எங்களுடைய தரப்பு வாதத்தை முன்வைத்து இருக்கிறோம். தீர்ப்புக்காக நாங்கள் காத்து இருக்கிறோம்.

எங்களுடைய நிபந்தனைகள் ஏற்கப்படாமல், தீர்ப்பு பாதகமாக இருந்தால் சட்டப்பூர்வமாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story