பெண் போலீஸ் அதிகாரி மாயமான விவகாரம் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு


பெண் போலீஸ் அதிகாரி மாயமான விவகாரம் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 4 March 2018 4:00 AM IST (Updated: 4 March 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பை போலீஸ்நிலைய பெண் போலீஸ் அதிகாரி மாயமான விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

நவிமும்பை போலீஸ்நிலைய பெண் போலீஸ் அதிகாரி மாயமான விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதவி இன்ஸ்பெக்டர் மாயம்

நவிமும்பையில் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அஸ்வினி கோரே(வயது37). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் அஸ்வினி கோரே மாயமான சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் தானே புறநகர் பாதுகாப்பு பிரிவு சீனியர் இன்ஸ்பெக்டர் அபய் குருந்கர்(52), பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேயின் உறவினர் ராஜேஷ் பாட்டீல்(44), அபய் குருந்கரின் கார் டிரைவர் குந்தன் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் மகேஷ்(48) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

கொலை வழக்குப்பதிவு

சீனியர் இன்ஸ்பெக்டர் அபய் குருந்கர், அஸ்வினி கோரேயை கொலை செய்து மற்ற 3 பேரின் உதவியுடன் அவரது உடலை வசாய் கழிமுகப்பகுதியில் வீசியதாக கூறப்படுகிறது. எனினும் அஸ்வினி கோரேயின் உடல் கிடைக்காததால் போலீசார் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர்.

இந்தநிலையில் போலீசார் தற்போது 4 பேர் மீதும் கொலை உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது குறித்து குற்றப்பிரிவு போலீசார், கைது செய்யப்பட்ட மகேஷ், அஸ்வினி கோரேயை கொலை செய்து உடலை வசாய் கழிமுகப்பகுதியில் வீசியதாக வாக்குமூலம் அளித்து உள்ளார். அந்த வாக்குமூலத்தை வைத்து 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்து உள்ளனர்.

Next Story