வங்கியில் கடன் வாங்கித்தருவதாக கூறி ஆன்-லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது
வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி ஆன்-லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னை தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்பாக்கம் பகுதியைச்சேர்ந்தவர் மனோஜ்(வயது 31). பி.இ. பட்டதாரி. இவரது செல்போனில் தொடர்புகொண்டு பேசிய மர்மநபர்கள், பிரபல நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி கடன் பெற்றுத்தருவதாக தெரிவித்தனர்.
அதை உண்மை என்று நம்பிய மனோஜ், தனக்கு ரூ.10 லட்சம் வங்கி கடன் வேண்டும் என கூறினார். அதற்கு அந்த நபர்கள், பதிவு கட்டணமாக ரூ.50 ஆயிரம் கட்டவேண்டும் எனக்கூறி ‘கிரிடிட் கார்டு’ மூலம் அவரிடம் இருந்து அந்த பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
கைது
ஆனால் அதன்பிறகு சொன்னபடி வங்கியில் கடன் வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுபற்றி மனோஜ் கேட்டதற்கு போலியான அலுவலக முகவரிகளை கொடுத்து ஏமாற்றி வந்துள்ளனர். இந்த மோசடியால் அதிர்ச்சி அடைந்த மனோஜ், இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆல்வின் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, பிரபல நிறுவனம் பெயரில் போலியாக சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் அலுவலகம் நடத்தி ஆன்-லைன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டதாக பள்ளிக்கரணை பகுதியைச்சேர்ந்த வரதராஜன்(29) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
அதில் டிப்ளமோ படித்து இருக்கும் வரதராஜன், பிரபல நிறுவனங்கள் பெயரில் போலியாக கால் சென்டர் நடத்தி, செல்போன்களில் பொதுமக்களை தொடர்புகொண்டு வங்கி கடன் பெற்றுத்தருவதாக கூறி பதிவு கட்டணம் கட்டவேண்டும் என பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இதில் அந்த போலி நிறுவனத்தில் வேலை செய்து வரதராஜனின் மோசடிக்கு துணை புரிந்ததாக திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்த அசோகன்(27), சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்த விக்கி(25), சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த இம்ரான்(32), திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ்(32) ஆகிய மேலும் 4 பேரையும் சேலையூர் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மக்களை இதுபோல் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கைதான 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கைதானவர்களிடம் இருந்து ரூ.63 ஆயிரம், ஒரு கம்ப்யூட்டர், 4 செல்போன்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story