பட்டிவீரன்பட்டி அருகே தூர்வாரப்படாத கண்மாய்களை கலெக்டர் நேரில் ஆய்வு


பட்டிவீரன்பட்டி அருகே தூர்வாரப்படாத கண்மாய்களை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 4 March 2018 3:45 AM IST (Updated: 4 March 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே தூர்வாரப்படாத கண்மாய்களை கலெக்டர் டி.ஜி. வினய் நேரில் ஆய்வு செய்தார்.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 101 ஏக்கர் பரப்பளவுள்ள தாமரைக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு மருதாநதி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரே நீர் ஆதாரமாகும். இந்த கண்மாய் ஆக்கிரமிப்பு மற்றும் மண்மேவி உள்ள காரணத்தினால் குறைந்த அளவு தண்ணீரே இருந்து வருகிறது. மேலும் தண்ணீர் வேகமாக வற்றி விடுவதால் இந்த கண்மாயை நம்பி நெல் மற்றும் காய்கறி, வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறிவருகின்றன.

மேலும் கண்மாய் ஆழமின்றி இருப்பதால் கண்மாயை ஒட்டியுள்ள ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. ஆழ்குழாய் கிணற்றில் இருக்கும் குறைந்தளவு தண்ணீரில் சில விவசாயிகள் மட்டும் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த கண்மாயிலிருந்து வரும் தண்ணீர் சித்தரேவு கிராமத்திற்கு உட்பட்ட கருங்குளம், சொட்டாங்குளம், ரெங்கசமுத்திரம் போன்ற குளங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள், மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டனர். இதையொட்டி இந்த கண்மாயை கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இந்த கண்மாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

இந்த கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கிணறுகளில் நீர்மட்டம் உயரவில்லை. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வைத்து கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தில் இந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக் கான ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் பயன்பெறும் விதமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, இந்த கண்மாயை இதுவரை உயர் அதிகாரிகள் பார்வையிட்டது கிடையாது. ஆனால் மாவட்ட கலெக்டர் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தியது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறினர்.

Next Story