தாயாருக்காக தயாரித்த சப்பாத்தி இயந்திரம்


தாயாருக்காக தயாரித்த சப்பாத்தி இயந்திரம்
x
தினத்தந்தி 4 March 2018 1:00 PM IST (Updated: 4 March 2018 12:18 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் சித்ரதுங்கா அருகே உள்ள புக்கசாகரா கிராமத்தை சேர்ந்தவர், என்.பொம்மை. வித்தியாசமான பெயரைக்கொண்ட இவர், வெல்டிங் தொழிலாளி.

என்.பொம்மை தனக்கு கிடைத்த தொழில் அனுபவங்களை வைத்து, தனது தாயாருக்காக சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை தயாரித்திருக் கிறார். அதை தனது தாயாருக்கே பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார்.

இந்த இயந்திரம் 8 கிலோ எடை கொண்டது. சோலார் மூலமும், மின்சாரம் மூலமும் இயங்கும் ஆற்றல் பெற்றது. ஒரு மணி நேரத்தில் 180 சப்பாத்திகளை தயாரிக்கும் தன்மை கொண்டது. இதில் தயாரிக்கும் சப்பாத்திகள் அதிக சுவையாகவும் இருக்கின்றனவாம்!

‘‘எனக்கு சப்பாத்தி சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். என் தாயார் வயதானவர் என்பதால் சப்பாத்தி தயாரிக்க சிரமப்படுவார். கோதுமை மாவை பிசைந்து சப்பாத்தியை உருட்டுவதற்கு நிறைய பேப்பர்களை பயன்படுத்துவார். அவர் படும் சிரமத்தை பார்த்ததும் எளிதாக சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் தயாரிப்பது பற்றி யோசித்தேன். அதற்கு எனது வெல்டிங் பட்டறை அனுபவம் கைகொடுத்தது. நான் வடிவமைத்திருக்கும் இந்த இயந்திரத்தை யார் வேண்டுமானாலும் சுபலமாக இயக்கிவிடலாம். இன்டக்ஷன் ஸ்டவ் வைப்பதற்கு தேவைப்படும் இடம் போதுமானது. 10 மணி நேரம் இந்த இயந்திரத்தை இயக்கினாலும், ஒரு யூனிட் மின்சாரம்தான் செலவாகும். இந்த இயந்திரம் ஒரு நிமிடத்தில் 3 சப்பாத்திகளை தயார் செய்யும்.

இப்போது என் அம்மா இயந்திரத்தின் மூலம் மகிழ்ச்சியாக சப்பாத்தி தயார் செய்து கொடுக்கிறார். இதற்கு முன்பு சாப்பிட்டுவிட்டு கூடுதலாக சப்பாத்தி கேட்டால் தயார் செய்து தரமாட்டார். இப்போது அவரது வேலை சுலபமாகி விட்டது. எவ்வளவு கேட்டாலும் சுட்டுத் தருகிறார். எங்கள் பகுதியை சேர்ந்த பெண்களும் என் தயாரிப்பில் உருவான சப்பாத்தி இயந்திரத்தை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது சமையல் செய்யும் நேரம் குறைந்து விட்டதாக சொல்கிறார்கள்’’ என்கிறார்.

பொம்மை சுற்றுப்புறத்துக்கு மாசு ஏற் படுத்தாத இயந்திரங்கள் உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகிறார். கரி துண்டுகளை பயன்படுத்தி சமையல் செய்யும் அடுப்பு ஒன்றையும் உருவாக்கி இருக் கிறார். விறகு அடுப்பை ஒப்பிடும்போது 80 சதவீதம் கரியமில வாயு வெளியாவதை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார்.

‘‘எனது அம்மா விறகு அடுப்பில் சமைக்கும்போது அடிக்கடி நெருப்பு அணைந்து விடும். மீண்டும் தீ பற்றவைக்கும்போது வீடு முழுவதும் புகை பரவி விடும். அதை கட்டுப்படுத்துவதற்காக சுற்றுப்புறத்திற்கு மாசு விளைவிக்காத அடுப்பை தயார் செய்து கொடுத்தேன். அது 20 சதவீதம் மட்டுமே புகையை வெளியிடும். கரியமில வாயுவை கட்டுப் படுத்த சுத்திகரிப்பு கருவி ஒன்றையும் பொருத்தியிருக்கிறேன்’’ என்கிறார்.

இவருடைய முயற்சிக்கு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Next Story