பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 5 March 2018 4:30 AM IST (Updated: 5 March 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ ஸ்கூட்டர்களை வழங்கினார்.

கோவில்பட்டி,

தமிழக அரசு உழைக்கும் மகளிரை ஊக்குவிக்க, பணி இடங்களுக்கு எளிதில் சென்றுவர மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அந்த திட்டத்தின் படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 534 ஸ்கூட்டர் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் முதல் கட்டமாக 100 ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அவர் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து 100 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்கள் வழங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ், வட்டார போக்குவரத்து அதிகாரி மன்னர்மன்னன், கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, தாசில்தார் தேவசகாயம், சமூக நலத்துறை அதிகாரி தனலட்சுமி, பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் பால அரிஹரமோகன், மோகன், கயத்தாறு ஆணையாளர் தங்கவேலு, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமேடையில் வலியுறுத்தி உள்ளார். மேலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, கருத்தினை கேட்டுள்ளார். இந்த நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க மறுத்தாக கூறுவது தவறான தகவல். மத்திய மந்திரி நிதின்கட்காரியை சந்தித்த பின்பு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக 1998-ல் மத்திய அமைச்சரவையில் இருந்து அ.தி.மு.க. விலகியது. அதுதான் அ.தி.மு.க.வின் நிலைபாடு. 14 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் இருந்த தி.மு.க. வருமானம் வரக்கூடிய துறையைதான் பெற்றது. ஏன் நீர் வளத்துறையை பெற்று காவிரி பிரச்சினையை தீர்த்து இருக்கலாமே. ஆனால் அவர்கள் அதுபற்றி கருத்து கூட தெரிவிக்கவில்லை. எனவே தமிழக எம்.பி.க்களை ராஜினாமா செய்யச்சொல்ல மு.க. ஸ்டாலினுக்கு தகுதியில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story