இருக்கன்குடி ரெயில்வே மேம்பாலம் திட்டப்பணியை தொடங்க வலியுறுத்தல்


இருக்கன்குடி ரெயில்வே மேம்பாலம் திட்டப்பணியை தொடங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 March 2018 3:15 AM IST (Updated: 5 March 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் அறிவித்த இருக்கன்குடி அருகே ரெயில்வே மேம்பாலம் திட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சாத்தூர்,

சாத்தூர்-கோவில்பட்டி ரெயில்வே பாதையில் இருக்கன்குடி அருகே லெவல்கிராசிங் உள்ளது. இருக்கன் குடிக்கு பிரதான சாலையிலும் ராமலிங்காபுரம், அம்மாப்பட்டி, நென்மேனி, மேட்டுப்பட்டி, பந்தல்குடி உள்ளிட்ட பல கிராமத்தினர் செல்லும் வழியிலும் இந்த கிராசிங் அமைந்துள்ளது. தினமும் 40-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்வதால் கேட் மூடப்படும்போது வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

மேலும் இருக்கன்குடி கோவிலுக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் வாகனங்களில் வருகின்றனர். கேட் மூடப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. லெவல்கிராசிங் குறுகியதாக இருப்பதால் ஒரு நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே கடக்க இயலும். இதனால் நெரிசலும் உள்ளது.

சுமார் 2 வருடத்துக்கு முன்பு இந்த ரெயில் பாதை மின்பாதையாக மாற்றப்பட்டதையடுத்து உயரழுத்த மின் வயரில் வாகனங்கள் சிக்கி விடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு இருபுறமும் தடுப்பு கம்பங்கள் வைக்கப்பட்டன. இதனால் இந்த பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து உயரமான பாரங்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் வர இயலவில்லை. மேலும் இந்தப்பகுதியில் வீடு கட்டுவோரும் விவசாயிகளும் ஆழ்துளை கிணறு அமைக்க அதற்கான ‘போர்வெல்‘ வாகனங்கள் இந்த வழியாக வர இயலவில்லை.

இந்த சிக்கலை தொடர்ந்து கோவில்பட்டி அல்லது விருதுநகருக்கு சென்று 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றியே இந்தப்பகுதி கிராமங்களுக்கு வர வேண்டியுள்ளது.

இதனால் இங்கு ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைதொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவின்போது இங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு செயல்வடிவம் பெறாமல் உள்ளது. திட்டப்பணிதொடங்குவதற்கு எந்த அறிகுறியும் இல்லை.

பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு மேம்பாலம் திட்டப்பணியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story