கடும் தண்ணீர் பற்றாக்குறையால் ஆடு, மாடுகளின் தாகம் தீர்க்க பாத்திரங்களை எடுத்து செல்லும் விவசாயிகள்


கடும் தண்ணீர் பற்றாக்குறையால் ஆடு, மாடுகளின் தாகம் தீர்க்க பாத்திரங்களை எடுத்து செல்லும் விவசாயிகள்
x
தினத்தந்தி 5 March 2018 2:45 AM IST (Updated: 5 March 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையால் ஆடு, மாடுகளின் தாகம் தீர்க்க மேய்ச்சலுக்கு செல்லும்போது பாத்திரங்களை விவசாயிகள் உடன் எடுத்துச்செல்கின்றனர்.

திருப்புவனம்,

கிராமங்களில் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வந்தவர்கள் காலை வேளையில் கிராமத்தில் உள்ள வயல்காட்டு பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அப்போதைய காலக்கட்டத்தில் மழை பெய்து வயல்களில் புல் வளர்ந்து பசுமையாக காட்சியளித்த நிலையில் இருந்து வந்தது.

இதனால் ஆடு , மாடுகள் நன்றாக மேய்ச்சலில் ஈடுபட்டு வீடு திரும்பும் நிலை இருந்து வந்தது. அவ்வாறு மேய்ச்சலின் போது கிராமத்தில் உள்ள குளம், குட்டை பகுதியில் தண்ணீர் நிரம்பி இருக்கும். இந்த நீரை ஆடு, மாடுகள் பருகி தாகத்தை தீர்த்து வந்தன. இல்லையெனில் கிணற்றுகளில் உள்ள பும்புசெட் மூலம் தண்ணீர் குடிக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததாலும், தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக வயல்வெளிகள் தற்போது புல், செடி கொடிகள் இல்லாமல் காட்சி அளிக்கின்றன. இதனால் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஆடு, மாடுகளை வளர்க்க முடியாமல் சிலர் விற்று வருகின்றனர். சில கூலி தொழிலாளர்கள் மட்டும் தொடர்ந்து இந்த ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். இவர்களின் நிலைமை தற்போது மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த பூவந்தி அருகே கீழனூர் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள், மேய்ச்சலுக்கிடையில் ஆடு,மாடுகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் வீட்டில் இருந்து புறப்படும் போதே பெரிய பாத்திரங்களை உடன் எடுத்துச் செல்கின்றனர். அந்த பாத்திரத்தை வைத்து குழாய்கள் இருக்கும் இடத்தில் உள்ள தண்ணீரை பிடித்து சென்று ஆடு, மாடுகளின் தண்ணீர் தாகத்தை தீர்த்து வருகின்றனர். அதன் பின்னர் பாத்திரத்தில் உள்ள மீதமுள்ள தண்ணீர் அப்படியே தூக்கிக்கொண்டு அடுத்த இடத்திற்கு நடந்து செல்கின்றனர். இவ்வாறு காலை முதல் மாலை வரை இவர்கள் பாத்திரம் மூலம் தண்ணீரை கால்நடைகளுக்கு வழங்கி வருகின்றனர். அந்த தண்ணீர் தீர்ந்து விட்டால் தொலைத்தூரம் சென்று குடிநீர் குழாய், அந்த பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீரை பிடித்து வருகின்றனர். தற்சமயம் மாவட்டத்தில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். 

Next Story