பெண்கள் ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு


பெண்கள் ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 5 March 2018 4:30 AM IST (Updated: 5 March 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

மதுரை,

மதுரை மாநகரில் 102 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா, மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடந்தது. கோபாலகிருஷ்ணன் எம்.பி., ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் அனீஷ் சேகர், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பெண்களுக்கு ஸ்கூட்டரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பெண்கள் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு செல்வதற்கு வசதியாக இரு சக்கர மோட்டார் வாகனங்களை ரூ.25 ஆயிரம் மானிய விலையில் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி மாவட்டத்தில் மட்டும் 217 பேருக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டு உள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்கி கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகம் தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஸ்கூட்டர் வாங்கியுள்ள அனைத்து பெண்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். செல்போனில் பேசாமல் பாதுகாப்பாக செல்ல வேண்டும். பெண்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். 6 மேயர்களை பெண்களாகவும், உள்ளாட்சி தேர்தலில் 50 விழுக்காடு பெண்களுக்காகவும் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டு அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் வீரராகவராவ் பேசும் போது கூறியதாவது:-

மானிய விலையில் இருசக்கர வாகனத் திட்டத்தின் மூலம் 2017-18-ம் ஆண்டில் மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 328 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் நகர்ப்புற பகுதியில் 2 ஆயிரத்து 483 வாகனங்களும், கிராமப்புற பகுதியில் 1,845 வாகனங்களும் வழங்கப்பட உள்ளன. பெறப்பட்ட விண்ணப்பங்கள் களஆய்வில் சரிபார்க்கப்பட்டு தேர்வுக்குழுவினரால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நகர், கிராமப்புறங்களில் 335 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story