வலங்கைமான் அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


வலங்கைமான் அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 5 March 2018 4:00 AM IST (Updated: 5 March 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சுப்பா நாயக்கன் தெருவில் தென் திருவண்ணாமலை என போற்றப்படும் உண்ணாமுலை அம்மன், அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திட தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையடுத்து யாகசாலையில் கும்பம் பிரதிஷ்டை செய்து 6 கால பூஜைகள் நடந்தது.

இதை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கடம் யானையின் மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர் விநாயகர், தெட்சிணாமூர்த்தி, மூலவரான அருணாச்சலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், முருகன், துர்க்கை ஆகிய ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கோவை நவக்கரை ராமானந்தமூர்த்தி சுவாமிகள், திருப்பூர் இந்தியன் ஸ்டீல் உரிமையாளர் துரை என்கிற மணி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழாவையொட்டி தீயணைப்பு வாகனம் தாயார் நிலையில் யாகசாலை அருகே நிறுத்தப்பட்டிருந்தது. வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திப்பட்டு இருந்தது.

மேலும், பக்தர்கள் கூட்ட நெரிசலை கண்காணிக்க ஏற்பாடு செய்து இருந்தனர். விழா ஏற்பாடுகளை அருணாச்சலேஸ்வரர் நற்பணி மன்றத்தினர், உபயதாரர்கள் செய்து இருந்தனர். 

Next Story