மன்னார்குடியில் ஒரே நாள் இரவில் 3 பெண்களிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு


மன்னார்குடியில் ஒரே நாள் இரவில் 3 பெண்களிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 5 March 2018 3:45 AM IST (Updated: 5 March 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் ஒரே நாள் இரவில் 3 பெண்களிடம் 11½ பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்து பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழமூன்றாம் தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி சாந்தி (வயது 36). இவர் சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் கோவிலுக்கு சென்று விட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மூன்றாம் தெருவில் வந்துகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் சாந்தி வந்த ஸ்கூட்டரில் மோதுவது போல வந்தனர். இதில் நிலை தடுமாறிய சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மன்னார்குடி நகரில் மேலும் ஒரு பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் தங்க சங்கலியை பறித்து சென்றனர்.

மன்னார்குடி மேலசெங்குந்தர் தெருவை சேர்ந்த ராஜகோபால் மனைவி கார்த்திகாராணி. இவர் ஸ்கூட்டரில் மன்னார்குடி கடைத்தெருவில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த கார்த்திகாராணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். மன்னார்குடி அருகே உள்ள சோழபாண்டி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி ராஜி(38). இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மன்னார்குடி அரித்திராநதி தெப்பக்குளம் வடகரை வழியாக ஸ்கூட்டரில் வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த மன்னார்குடி போலீசார் மேற்கண்ட 3 சங்கிலி பறிப்பு கொள்ளைகளிலும் ஒரே மர்மநபர்களே ஈடுபட்டு உள்ளதாகவும், இவர்களை பிடிக்க மன்னார்குடி இன்ஸ்பெக்டர் மணிவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருதாகவும் தெரிவித்தனர். 

Next Story