அணைகளின் நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


அணைகளின் நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 5 March 2018 3:30 AM IST (Updated: 5 March 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஓரளவு மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது. ஆனால் அதன்பிறகு முறையாக மழை பெய்யாததால் தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது.

திண்டுக்கல் நகருக்கு, ஆத்தூர் அருகே உள்ள காமராஜர் அணை குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. 23½ அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது, 14 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் திண்டுக்கல் நகர் பகுதியில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. வறட்சியால் விவசாயமும் பொய்த்து, பயிர் சாகுபடி பரப்பளவு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் சராசரியாக 44.70 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த மாதம் 10.01 மி.மீ. மட்டுமே மழை பதிவாகி உள்ளது. இது சராசரி அளவை விட 34.69 மி.மீ. மழை குறைவாக பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 91 ஆயிரத்து 488 பாசன கிணறுகள் உள்ளன.

இதில் சுமார் 36 ஆயிரத்து 500 கிணறுகளில் 2 முதல் 3 மணி நேரமும், மீதமுள்ள கிணறுகளில் 2 மணி நேரத்துக்கு குறைவாகவும் பாசனம் பெறும் அளவுக்கு தண்ணீர் உள்ளது. கோடைகாலம் தொடங்கும் முன்பே மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

Next Story