சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைந்தது


சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைந்தது
x
தினத்தந்தி 5 March 2018 3:30 AM IST (Updated: 5 March 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.400-க்கு விற்பனையானது.

சேலம்,

சேலம் டவுனில் வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இங்கு வீராணம், பனமரத்துப்பட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மார்க்கெட்டில் வரத்துக்கு ஏற்ப பூக்களின் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்கள் என முக்கிய நாட்களில் பூக்கள் விலை பெரும்பாலும் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் பூக்கள் விலை உயர்வாக இருந்தாலும் பொதுமக்களும் பூக்களை வாங்கி பயன்படுத்திதான் வருகிறார்கள்.

நேற்று மார்க்ட்ெ-டில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைந்து விற்பனை ஆனது. அதாவது கடந்த வாரம் கிலோ ரூ.700 வரை விற்கப்பட்ட குண்டுமல்லி நேற்று ரூ.300 குறைந்து ரூ.400-க்கு விற்கப்பட்டது. இதேபோல் கடந்த வாரம் ரூ.300-க்கு விற்ற காக்கட்டான் ரூ.200-க்கும், ரூ.70-க்கு விற்ற அரளி ரூ.40-க்கும், ரூ.100-க்கு விற்ற சம்பங்கி ரூ.70-க்கும், ரூ.80-க்கு விற்ற சாமந்தி ரூ.60-க்கும், ரூ.200-க்கு விற்ற பட்டன் ரோஸ் ரூ.120-க்கும், ரூ.600-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும் போது, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பனி காரணமாக மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து குறைவாக இருந்தது. தற்போது பனியின் தாக்கம் குறைந்து வருவதால் மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. முகூர்த்தநாட்கள் மற்றும் பண்டிகை காலம் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பின் காரணமாகவும் பூக்கள் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. வரும் நாட்களிலும் பூக்களின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றனர். கடந்த சில வாரங்களில் குண்டுமல்லி கிலோ ரூ.1,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story