ஒய்சால மன்னனின் சின்னம் பொறித்த 14-ம் நூற்றாண்டு கால பலகைக்கல் சிற்பம் கண்டுபிடிப்பு


ஒய்சால மன்னனின் சின்னம் பொறித்த 14-ம் நூற்றாண்டு கால பலகைக்கல் சிற்பம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 5 March 2018 5:10 AM IST (Updated: 5 March 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

ஒய்சால மன்னனின் சின்னம் பொறித்த 14-ம் நூற்றாண்டு கால பலகைக்கல் சிற்பம் ஒன்று திருவண்ணாமலை அருகே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே பள்ளிகொண்டாப்பட்டு கிராமம் உள்ளது. இங்கு சிற்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது அந்த சிற்பம் ஒய்சால மன்னனின் சின்னம் பொறித்த கி.பி.14-ம் நூற்றாண்டு காலத்து பலகைக்கல் சிற்பம் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சார்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் சேகர், நெடுஞ்செழியன், புகைப்பட ஆவணக் காப்பாளர் சேது மற்றும் ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பள்ளிகொண்டாப்பட்டு சாலையில் அரிசி ஆலை ஒன்றின் எதிர்புறம் உள்ள வயலில் தெற்கு நோக்கியவாறு 3 அடி உயரத்தில் இந்த பலகைக்கல் சிற்பம் உள்ளது. இதன் பின்புறத்தில் பதிவு ஏதும் இடம் பெறவில்லை. முன்புறம் கண்டபேருண்டா என்னும் இருதலைப்பறவை, புலி, மலை, பிறை, சூலம், குத்துவிளக்கு ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன. ஒய்சால மன்னர்களின் தேசிய சின்னமான கண்டபேருண்டா என்ற மனித உடல் கொண்டு இருதலைப்பறவை வலதுபுறம் நோக்கியவாறு நடக்கும் பாணியில் காணப்படுகிறது.

அதன் வலது கை அபயகரமாக இருக்க, இடது கை இடப்புறம் மேல்நோக்கி நீட்டியவாறு உள்ளது. பறவைக்கு மேல் மலையும், பிறையும் உள்ளன. கண்டபேருண்டாவின் மீது மாலை சூடியிருக்க, புலி ஒன்று தன் வலது முன் காலைத் தூக்கியவாறு நிற்கிறது. புலியின் மேற்புறம் சூலம் ஒன்றும் குத்துவிளக்கு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளன.

கி.பி. 14-ம் நூற்றாண்டில் திருச்சி கண்ணனூர் கொப்பத்தைத் தலைநகராகவும் திருவண்ணாமலையை துணைத்தலைநகராகவும் கொண்டு தமிழகத்தை ஆண்டவன் வீரவல்லாளன். திருவண்ணாமலையை கோவில் வரலாற்றோடு இணைத்து பேசப்படும் இந்த மன்னனுக்கு அருணாசலேஸ்வரர் மகனாக பிறந்ததாக ஐதீகம். திருவூடல் நிகழ்வின் இறுதிநாளில் மன்னன் இறந்த செய்தி வர அருணாசலேஸ்வரர் சென்று சம்பந்தம் கட்டுவதாகவும் மாசி மகம் அன்று ஆண்டு தோறும் திதி கொடுப்பதாகவும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு திருவண்ணாமலையில் இருந்து உற்சவர் ஊர்வலமாக செல்லும் பாதை கீழ்நாத்தூர், பள்ளிகொண்டாப்பட்டு, சின்ன காங்கேயனூர், சம்பந்தனூர் எனும் பாதையாகும். இந்த பலகைக்கல் சிற்பம் கிடைத்துள்ள இடம் இப்போது இருக்கும் பாதையில் இருந்து பத்து, பதினைந்தடி தள்ளி உள்ளது.

இந்த கண்டபேருண்டா சிற்பக்கல் உள்ள பகுதியே பழைய பாதை என்றும், அது நேரே பள்ளிகொண்டாப்பட்டில் இருந்து சம்பந்தனூர் கவுதம நதிக்கரை திதி மண்டபத்தில் சென்று சேரும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு தெற்கே, மற்றொரு நடுகல் உள்ளது. வீரன் ஒருவன் கையில் வாளும், கேடயமும் ஏந்தியவாறு காட்சியளிக்கிறது. காலருகே இடதுபுறம் சிறிய அளவில் ஒரு மனித உருவம் உள்ளது.

எனவே திருவண்ணாமலையில் இருந்து சம்பந்தனூருக்கு திதி கொடுக்க அருணாசலேஸ்வரர் செல்லும் வழியில் உள்ள பள்ளிகொண்டாப்பட்டில் இந்த பலகைக்கல் சிற்பம் இடம் பெற்றிருப்பதும், இதன் முன் வழிபாட்டு அடிப்படையில் சிறு வழிபாட்டுக்கற்கள் நடப்பட்டிருப்பதும், இது பள்ளிகொண்டாப்பட்டில் வல்லாள மகாராஜனுக்குரிய வழிபாட்டு நினைவிடமாக இருக்கலாம் எனக் கருத வாய்ப்புள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சம்பந்தனூரில் ஒரு பழமையான கல்லறை ஒன்று இக்குழுவில் உள்ள பேராசிரியர்கள் மூலம் கண்டறியப்பட்டதை இங்கு ஒப்பிட்டு நோக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே கூடுதல் தகவல் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story