செஞ்சி அருகே வீட்டின் மீது பஸ் மோதல்; 30 பேர் காயம்


செஞ்சி அருகே வீட்டின் மீது பஸ் மோதல்; 30 பேர் காயம்
x
தினத்தந்தி 5 March 2018 3:30 AM IST (Updated: 5 March 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே வீட்டின் மீது பஸ் மோதியதில் 30 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செஞ்சி,

செஞ்சியில் இருந்து வெடால் கிராமத்திற்கு நேற்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் நெகனூர் கிராமத்தில் உள்ள வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக, டிரைவர் பஸ்சை நேராக ஓட்டினார்.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடி சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது. இதில் பஸ்சில் பயணம் செய்த 30 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தொப்பச்சி (வயது 70), அம்மா குளத்தை சேர்ந்த சடையன் மனைவி அமுதா(45), பள்ளி குளத்தை சேர்ந்த ராமலிங்கம் மனைவி தேவி(40), நந்தன்(65), ரஞ்சிதம்(54), மஞ்சுளா(23), லட்சுமணன்(55), ஆறுமுகம்(52), பச்சையம்மாள், ஏழுமலை(50), ஜெயா(40), ரங்கநாதன்(52), மாலா(41) உள்பட 24 பேர் மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது வல்லம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பொருளாளர் தமிழரசன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராசு ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story