தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரெயில் போக்குவரத்து தொடங்கியது


தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரெயில் போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 6 March 2018 1:15 AM IST (Updated: 6 March 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கம் நேற்று முதல் தொடங்கியது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் 3-வது ரெயில் முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முனையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்பட்டு வந்த விரைவு ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் செங்கோட்டைக்கு தாம்பரத்தில் இருந்து அந்த்யோதயா சிறப்பு ரெயில் இயக்கப் படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகளுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டது.

திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் காலை 7 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படுகின்ற தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரெயில் செங்கல்பட்டு, மதுராந்தகம், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புகோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

அதேபோல மறுநாள் காலை 6 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்தும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட ரெயிலை தாம்பரம் ரெயில்வே மேலாளர் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி மேலாளர் ஜெயக்குமார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பயணிகளின் வரவேற்புக்கு ஏற்ப வாரம் இருமுறை இயக்கப்படும். ரெயிலை கூடுதல் நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story