வருகிற 30-ந்தேதி மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் 70 ஜோடிகளுக்கு திருமணம்


வருகிற 30-ந்தேதி மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் 70 ஜோடிகளுக்கு திருமணம்
x
தினத்தந்தி 6 March 2018 3:15 AM IST (Updated: 6 March 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் வருகிற 30-ந்தேதி 70 ஜோடிகளுக்கு திருமண விழா நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்கள்.

மதுரை,

மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் 70 ஜோடிகளுக்கு 70 வகை சீர்வரிசைகளுடன் வருகிற 30-ந்தேதி திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. இந்த திருமண விழா மதுரை பாண்டி கோவில் ரிங்ரோட்டில் உள்ள அம்மா திடலில் நடக்கிறது. விழாவுக்கான கால்கோள் நடும் விழா நடந்தது.

ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்று கால்கோள் நாட்டினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ், சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம், நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், முத்துராமலிங்கம், நிர்வாகிகள் அய்யப்பன், சாலைமுத்து, வெற்றிவேல், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் பேரவை சார்பில் ஏழை, எளிய பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்தாண்டு 70-வது பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் 70 ஜோடிகளுக்கு 70 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கி வருகிற 30-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். திருமணம் நடக்க உள்ளவர்கள் பற்றி, அந்தந்த ஊர்களில் பேரவை நிர்வாகிகள் தேர்வு செய்து வருகிறார்கள். விழாவில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த பிரதமரிடம் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் வலியுறுத்தி உள்ளனர். அவரும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். எனவே இந்த அரசு கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாடுபடும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சோழவந்தானில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மந்தை களத்தில் நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தையல் மிஷின், தேய்ப்பு பெட்டி, வேட்டி சேலை, பள்ளி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார். இதில் மாணிக்கம் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் கொரியர் கணேசன் செய்திருந்தார். 

Next Story