பெற்றோர்-முதியோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விளம்பரப்படுத்த வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பெற்றோர்-முதியோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விளம்பரப்படுத்த வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 March 2018 4:15 AM IST (Updated: 6 March 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோர்- முதியோர் பாதுகாப்பு சட்டம் குறித்து போதிய அளவில் விளம்பரப்படுத்திட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த போஸ்ராஜ் என்பவர் தனது குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ரெங்கநாதன் வீட்டில் 25 வருடங்களாக தங்கியிருந்தார். தனது சொத்துக்களை தனக்கு பின்பு ரெங்கநாதன் அனுபவித்துக் கொள்ளலாம் என்று 2010-ம் ஆண்டில் உயில் எழுதி வைத்தார். 2 வருடங்களுக்கு பின்பு அந்த உயிலில் மாற்றம் செய்ய விரும்புவதாக போஸ்ராஜ் ரெங்கநாதனிடம் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் 30.7.2012 அன்று போஸ்ராஜ் இறந்துவிட்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மனைவி தேவாரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்ததில், போஸ்ராஜ் மர்ம உறுப்பில் தாக்கப்பட்டு இறந்ததாகவும், இதற்கு ரெங்கநாதன், அவரது மனைவி அழகம்மாள், போஸ்ராஜின் தம்பி அமிர்தராஜ் ஆகிய 3 பேர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ரெங்கநாதன், அழகம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், அமிர்தராஜ்க்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தங்கள் மீதான தண்டனையை ரத்து செய்யக்கோரி அவர்கள் 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் விமலா, கிருஷ்ணவள்ளி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர்களில் ரெங்கநாதன் மீதான தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மற்ற 2 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. இந்த வழக்கில் கொலையுண்ட போஸ்ராஜ் போன்ற மூத்த குடிமக்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை போன்றவர்களை பாதுகாக்க பெற்றோர் மற்றும் முதியோர் பாதுகாப்பு சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது. அதில் பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதத்துடன் கூடிய ஜெயில் தண்டனை விதிக்கலாம். இந்த சட்டம் குறித்து ஊடகங்களில் போதுமான விளம்பரம் செய்ய வேண்டும். இந்த சட்டத்தை பல்வேறு துறை அதிகாரிகளும் ஒன்றுபட்டு செயல்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story