வருசநாடு பகுதியில் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதாக விவசாயிகள் புகார்


வருசநாடு பகுதியில் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதாக விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 6 March 2018 3:00 AM IST (Updated: 6 March 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு பகுதியில் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு கிராமத்தை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் தோட்ட பகுதிகளிலேயே கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

இலவச மின்சார சலுகை இல்லாத விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார அளவை பொருத்து மின்வாரிய அலுவலகங்களில் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வருசநாடு பகுதியில் தோட்டப்பகுதிகளுக்கு கூடுதல் மின் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, கடந்த 4 மாதங்களாக வழக்கமாக செலுத்தும் கட்டணத்தை விட மூன்றில் ஒரு பங்கு மின் கட்டணம் கூடுதலாக வருகிறது. தற்போது போதிய அளவில் மழை இல்லாததால் கிணறுகளில் நீர்மட்டம் மிக குறைந்த அளவிலேயே உள்ளது. எனவே நாள் முழுவதும் மின்மோட்டார் இயக்க முடியாது. நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே மின் மோட்டாரை இயக்கி வருகிறோம்.

இருப்பினும் மின் கட்டணம் அதிக அளவில் வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் இல்லை. ஏற்கனவே மழை இல்லாமல் பயிர்கள் அனைத்தும் கருகி அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தற்போது சில மாதங்களாக மின் கட்டணமும் அதிக அளவில் வருவது, மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய காரணத்தால் கடன் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இந்த பிரச்சனை குறித்து உரிய தீர்வு காண வேண்டும், என்றனர்.

Next Story