மறுசீராய்வு என்ற பெயரில் 5-வது வார்டை பிரிப்பதை கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


மறுசீராய்வு என்ற பெயரில் 5-வது வார்டை பிரிப்பதை கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 March 2018 3:15 AM IST (Updated: 6 March 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

மறுசீராய்வு என்ற பெயரில் 5-வது வார்டை இரண்டாக பிரிப்பதை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் திருப்பூர் ஆத்துப்பாளையம் ரோட்டில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 1 மண்டலத்திற்கு 15 வார்டுகள் என மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வார்டு மறு சீராய்வு என்ற பெயரில் வார்டுகளை பிரிப்பது, சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 5-வது வார்டை 2 ஆக பிரிப்பதை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் ஆத்துப்பாளையம் ரோட்டில் நேற்றுமாலை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.15 வேலம்பாளையம் பகுதி பொறுப்பாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசுகையில் “ மாநகராட்சியின் மறு சீராய்வு என்ற இந்த நடவடிக்கை பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களுக்கும் ஏராளமான குழப்பங்களை ஏற்படுத்தும். மேலும் இதுதொடர்பாக பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படும் என்ற நிலையில் இந்த வார்டுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் இருந்து கையெழுத்துகளை பெற்று கோரிக்கை மனுக்களாக மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி வார்டு மறு சீராய்வு என்ற நடவடிக்கையை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் கைவிடவேண்டும்“ என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியபடியும், சட்டையில் கருப்பு சின்னம் அணிந்தும் கொண்டனர். இதில் தி.மு.க. சார்பில் வார்டு செயலாளர்கள் ரத்தினசாமி, எம்.எஸ்.மணி, திருஞானம் (காங்), சீனிவாசன் (பா.ஜ.க)செல்வராஜ் (இந்திய கம்யூ), சுப்ரமணியன், ஆறுமுகம் (மார்க்சிஸ்ட் கம்யூ), கணேசன் (தா.மா.கா.), வேலுசாமி (கொ.மு.தே.க), அர்ஜுனன் (காமாட்சி அம்மன் பாத்திர சங்கம்), கதிரேசன் (எவர்சில்வர் பாத்திர பட்டறை சங்கம்), வேலுசாமி (எல்.பி.எப்) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story