குடியாத்தம் அருகே பெண் வெட்டிக்கொலை கணவரிடம் விசாரணை


குடியாத்தம் அருகே பெண் வெட்டிக்கொலை கணவரிடம் விசாரணை
x
தினத்தந்தி 6 March 2018 4:30 AM IST (Updated: 6 March 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம்,

குடியாத்தம் அருகே உள்ள தட்டப்பாறை சின்னாலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 33), கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (29). இவர்களுக்கு துளசி (9) என்ற மகளும், திலீப் (7) என்ற மகனும் உள்ளனர். தட்டப்பாறையில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் துளசி 4-ம் வகுப்பும், திலீப் 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரபுவுக்கு தலையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கணவன் - மனைவி தகராறில் ஈடுபடுவதால், 2 குழந்தைகளும் இரவில், அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று தூங்கிவிடுவார்கள். மறுநாள் காலையில் தான் தங்களது வீட்டிற்கு வருவார்கள்.

நேற்று முன்தினம் இரவு குழந்தைகள் பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டனர். வழக்கம் போல் கணவன் - மனைவி இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலையில் குழந்தைகள் தங்களது வீட்டிற்கு வந்தனர். அப்போது தாய் வள்ளி தலையில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து கூச்சலிட்டுள்ளனர்.

சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து வள்ளியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, தாலுகா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து தடயவியல் துறையினர் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபுவை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story